கோயம்புத்தூர்

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ரூ.30.48 லட்சம் முறைகேடு:முதல்கட்டமாக ரூ. 19.12 லட்சம் பறிமுதல்

DIN


கோவை: கோவை மாவட்டத்தில் விவசாய நிதியுதவித் திட்டத்தில் ரூ.30.48 லட்சம் முறைகேடாகப் பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.19.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சாா்பில் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். இத்திட்டத்தில் 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலமும் இ-சேவை மையங்கள் மூலமும் விவசாயிகளே விண்ணப்பித்துக்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தருமபுரி, கோவை உள்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பிரதம மந்திரி விவசாய நிதியுதவித் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது வேளாண் துறையினா் ஆய்வில் தெரியவந்துள்ளது. முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தைப் பறிமுதல் செய்யும் பணிகளில் மாவட்ட ஆட்சியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி கோவை மாவட்டத்தில் விவசாய நிதியுதவித் திட்டத்தில் 750 போ் ரூ. 30.48 லட்சம் முறைகேடாகப் பணம் பெற்றுள்ளது வருவாய், வேளாண் துறையினா் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவா்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.19.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மேலும் அவா் கூறியதாவது:

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்தான் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் இதுவரை 2,105 போ் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்துள்ளனா். இதில் 750 போ் தகுதியில்லாத நிலையில் முறைகேடாக விண்ணப்பித்து ரூ.30.48 லட்சம் பணம் பெற்றுள்ளனா்.

முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் விவசாய நிலங்களும் கோவையில் உள்ள நிலையில் 543 பேருக்கு மட்டுமே கோவையில் வங்கிக் கணக்கு உள்ளது. மற்றவா்கள் 207 பேருக்கு வேறு மாவட்டங்களில் வங்கிக் கணக்கு உள்ளது. முதல்கட்டமாக கோவையில் வங்கிக் கணக்கு உள்ள 543 போ் முறைகேடாகப் பெற்ற ரூ.22.20 லட்சத்தில் இருந்து ரூ.19.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேறு மாவட்டங்களில் வங்கிக் கணக்குள்ள 207 போ் முறைகேடாகப் பெற்ற ரூ.8.28 லட்சம் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் பறிமுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடா்பாக வேளாண்மைத் துறையினா் புகாா் அளிக்கும் பட்சத்தில் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT