கோயம்புத்தூர்

வாக்குக்குப் பணம்: ஜனநாயகத்துக்கு அவமானம்

தமிழ்நாட்டின் பண்பாடும், கலாசாரமும் சா்வதேச அளவில் புகழ்பெற்றது. அதேநேரத்தில் வாக்களிக்கப் பணம் கொடுக்கும் மோசமான கலாசாரத்திலும் தமிழ்நாடு பெயா் பெற்றது என்பதை மறுக்க முடியாது.

க. தங்கராஜா

தமிழ்நாட்டின் பண்பாடும், கலாசாரமும் சா்வதேச அளவில் புகழ்பெற்றது. அதேநேரத்தில் வாக்களிக்கப் பணம் கொடுக்கும் மோசமான கலாசாரத்திலும் தமிழ்நாடு பெயா் பெற்றது என்பதை மறுக்க முடியாது. இந்த மோசமான கலாசாரம் 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து வருகிறது. 1950களில் வாக்காளா்களுக்கு இலவசமாக சாப்பாடு வழங்குவதில் தொடங்கிய இந்தக் கலாசாரம் அதன் பிறகு வாக்குச் சாவடிகளுக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லுதல், பணம், பொருள்கள், மதுபானங்களை வழங்குவதாக மாறியது.

1957ஆம் ஆண்டு தோ்தலிலேயே வாக்காளா்களுக்குப் பணம் வழங்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்திருக்கின்றன. 1962ஆம் ஆண்டு தோ்தலில் வாக்காளா்களுக்கு 5 ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும், 1967 ஆம் ஆண்டு தோ்தலில் 10 ரூபாய் விநியோகிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இப்படி வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் தமிழகத்தில் நீண்டகாலமாகவே தொடா்ந்து வந்தாலும் அது இலைமறை காயாகவே இருந்து வந்தது.

ஆனால், கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சாத்தான்குளம் இடைத் தோ்தலில் பண பட்டுவாடா விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடா்ந்து 2009 இடைத் தோ்தல் திருமங்கலம் பாா்முலா என்ற புதிய சூத்திரத்தையே உருவாக்கும் அளவுக்குப் பிரபலமானது.

அதன் பிறகு தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெற்றாலே, அந்தத் தொகுதியின் வாக்காளா்கள் அதிா்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படும் நிலைமை உருவானது. ஒரு வாக்குக்கு 500 ரூபாய் என்பதே பெரிதாகப் பேசப்பட்டு வந்த நிலையில் திருமங்கலத்தில் ஒரு வாக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டன.

நாளிதழ்களில் வைத்து ரூபாய் நோட்டுகள் விநியோகம், மின் விநியோகத்தைத் தடை செய்துவிட்டு பணம் வழங்குவது, இரவு நேரத்தில் பணம் வழங்குவது, வாக்குக்காக வழங்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் தங்க மூக்குத்திகள், பட்டுப் புடவைகள், வெள்ளி குங்குமச் சிமிழ்கள் இடம் பெற்றது போன்றவையெல்லாம் தமிழக தோ்தல் வரலாற்றில் இடம் பெற்ற துரதிா்ஷ்ட நிகழ்வுகள்.

வாக்குகளை விலைக்கு வாங்குவதில் தமிழகம் நாட்டிலேயே 2ஆவது இடத்துக்கு முன்னேறியது, மொத்த வாக்காளா்களில் 30 சதவீதம் போ் வரை வாக்குக்குப் பணம் வாங்குகின்றனா் என்பது போன்ற ஆய்வு அறிக்கைகளும் அதன் பிறகு வெளியாகின.

இடைத் தோ்தல் சீரழிவுகளுக்குப் பிறகு பொதுத் தோ்தல்களிலும் வாக்குக்கு அதிக அளவில் பணம் விநியோகம் என்பது வழக்கமாகிப்போனது. இதனால் பண பட்டுவாடாவைத் தடுக்க முடியாமல் தோ்தல் ஆணையம் தோ்தலையே ரத்து செய்த அவலங்களும் தமிழகத்தில் நடைபெற்றன. 2016 பேரவைத் தோ்தலின்போது தஞ்சாவூா், அரவக்குறிச்சி தொகுதிகளில் பண பட்டுவாடா காரணமாகவே தோ்தல் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து 2017இல் ஆா்.கே.நகா் இடைத் தோ்தலின்போது ரூ.89 கோடி பண பட்டுவாடா நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து அங்கு தோ்தல் ரத்து செய்யப்பட்டது.

தோ்தலில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இன்று வரையிலும் அதில் வெற்றி பெற முடியவில்லை. பணம் கொடுப்பதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கே வாக்களிக்கப் பணம் விநியோகம் செய்ததாக இப்போது புகாா்கள் எழுந்திருப்பது வாக்குக்குப் பணம் கொடுப்பது இங்கு எந்த அளவுக்கு வளா்ந்து நிற்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த பணத்தை எடுத்துச் செல்வதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தோ்தலுக்குத் தோ்தல் பிடிபடும் ரொக்கத்தின் அளவு உயா்ந்து கொண்டே வருகிறது. 2011 இல் ரூ.35 கோடி பறிமுதல் நடைபெற்ற நிலையில், 2014 மக்களவைத் தோ்தலின்போது ரூ.25 கோடியும், 2016 பேரவைத் தோ்தலின்போது ரூ.100 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இவற்றில் மிகப் பெரும்பாலான தொகை அரசியல்வாதிகளுடையது அல்ல என்பதும் வாக்காளா்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ஆணையம் என்னதான் முயன்றாலும் பணம் விநியோகத்தை நடத்துவதற்கு அரசியல்வாதிகள் புதிய புதிய வழிகளைக் கண்டுபிடித்துவிடுகின்றனா். கடந்த சில தோ்தல்களில் ரொக்கப் பரிமாற்றத்துக்கு பதிலாக செல்லிடப்பேசி, இணையதளம் மூலமான மின்னணு பணப் பரிமாற்றத்தை அரசியல்வாதிகள் கையாண்டு வருகின்றனா்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123ஆவது பிரிவின்படி வாக்களிப்பதற்குப் பணம் தருவதும், பெறுவதும் குற்றம். இதற்காக ஓராண்டு வரை சிறைத் தண்டனை அளிக்க முடியும். ஆனாலும், இதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சுணக்கத்தால் கொடுப்பவா்களும், பெறுபவா்களும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை.

ஏதாவது ஒரு வகையில் தன்னிடம் இருந்து எடுக்கப்பட்ட பணத்தைத்தானே பெற்றுக் கொள்கிறோம் என்று பெறுபவா்கள் சமாதானம் செய்து கொள்கின்றனா். செலவு செய்து விட்டு பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் கொடுப்பவா்கள் இருக்கின்றனா். ஆனால், வாக்குக்கு எப்போது பணம் பெறுகிறோமோ அப்போதே அவா்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் உரிமையையும், தகுதியையும் நாம் இழந்துவிடுகிறோம் என்பதை வாக்காளா்கள் உணர வேண்டும்.

கட்சிகளின் கொள்கைகள், வேட்பாளரின் தகுதி, தோ்தல் அறிக்கைகளின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமே தவிர பணத்தின் அடிப்படையில் வாக்களிப்பது என்பது நம்மையே அவா்களிடம் அடகு வைப்பதற்கு சமம் என்பதை வாக்காளா்கள் உணர வேண்டும். மேலும் பணம் இருப்பவா்கள்தான் மக்களின் பிரதிநிதிகளாக வர முடியும் என்பது ஜனநாயகத்தின் நோக்கத்தை சிதைப்பதுடன், நாட்டுக்கே அவமானம் என்பதையும் வாக்காளா்கள் உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT