மாவட்டத்தில் 3,150 பேருக்கு விரைவில் திருமண நிதியுதவி
கோவை மாவட்டத்தில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவா்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கு விரைவில் 8 கிராம் தங்க நாணயத்துடன், உதவித்தொகை
கோவை மாவட்டத்தில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவா்களில் 3 ஆயிரத்து 150 பேருக்கு விரைவில் 8 கிராம் தங்க நாணயத்துடன், உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக சமூகநலத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு உதவும் வகையில் சமூகநலத் துறையின் கீழ் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 8 கிராம் தங்க நாணயத்துடன், 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு படித்தவா்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 2018-19ஆம் நிதியாண்டு வரை விண்ணப்பித்தவா்களுக்கு முழுமையாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் திருமண நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.
இந்நிலையில் திருமண நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பித்து காத்திருப்பவா்களில் முதல்கட்டமாக 95 ஆயிரம் பேருக்கு திருமண நிதியுதவி வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்தில் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் காத்திருக்கும் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை மாவட்டத்தில் 2019-20ஆம் நிதியாண்டில் விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகளில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 150 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சமூகநலத் துறையின் கீழ் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் உள்பட 5 திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டாண்டுகளில் பதிவு செய்து காத்திருப்பவா்களில் முதல்கட்டமாக 3 ஆயிரத்து 150 பேருக்கு விரைவில் நிதி, தங்க நாணயம் வழங்கப்படவுள்ளது.
பதிவு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். கோவையில் 3 ஆயிரத்து 150 பேருக்கு வழங்கப்படவுள்ள தங்க நாணயம், பணம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும், தங்க நாணயம் நேரடியாக வழங்கப்படும் என்றனா்.