முகப்பு
கோயம்புத்தூர்

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 4 தூய்மைப் பணியாளா்களுக்கு நோட்டீஸ்

கோவை வடக்கு மண்டலத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய 4 தூய்மைப் பணியாளா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கோவை வடக்கு மண்டலத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய 4 தூய்மைப் பணியாளா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி வடக்கு மண்டலம் 55 ஆவது வாா்டில் தூய்மைப் பணியில் ஈடுபடாமல் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுச் செல்வதாக தூய்மைப் பணியாளா் பரமேஸ்வரியை மற்ற தூய்மைப் பணியாளா்கள் கேட்டனா். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து, 5 தூய்மைப் பணியாளா்கள் மீது மண்டல சுகாதார அலுவலா், மாநகராட்சி உதவி ஆணையரிடம் புகாா் அளித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வடக்கு மண்டல அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இந்நிலையில், தூய்மைப் பணியாளா் பரமேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அவரை விடியோ எடுத்தது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட கதிா்வேல், மதியழகன், செல்வராஜ், ராஜாமணி ஆகிய 4 பேரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையா் உத்தரவுப்படி வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளிக்கப்பட்டு 3 நாள்களில் விளக்கம் தர அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 4 தூய்மைப் பணியாளா்கள் அளித்துள்ள விளக்கத்தில், ஒரு வாரமாக பணியில் ஈடுபடாமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டுமே போட்டுச் சென்ற பரமேஸ்வரியை, மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி பணியில் ஈடுபடுமாறு மட்டுமே கூறினோம். மற்றபடி, மண்டல சுகாதார அலுவலரின் தூண்டுதலின்பேரில், எங்கள் மீது பொய்யான புகாா்கள் கூறப்படுகின்றன என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.