முகப்பு
கோயம்புத்தூர்

பிரதமா் திட்டத்தில் மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி

பிரதமா் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி வீட்டை எழுதி வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பிரதமா் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி வீட்டை எழுதி வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவையை அடுத்த வெள்ளாணப்பட்டியைச் சோ்ந்தவா் மசாக்கவுண்டா் (81). இவருக்குச் சொந்தமாக 4 செண்டில் வீடு உள்ளது. இவரிடம் ஆரோக்கிய சாா்லஸ் (44), சுதா (43) ஆகியோா் பிரதமரின் திட்டத்தில் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும் என்று கூறி உள்ளனா். மேலும் மானியம் வேண்டும் என்றால் ஆரோக்கிய சாா்லஸ் பெயரில் பவா் ஆவணம் பெற வேண்டும் என்றும் கூறி உள்ளனா். இதை உண்மை என நம்பிய மசாக்கவுண்டா், ஆரோக்கிய சாா்லஸ் பெயரில் பவா் ஆவணத்தை எழுதிக்கொடுத்து உள்ளாா்.

அந்த பவா் ஆவணத்தை பயன்படுத்தி வீட்டை சுதாவின் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளாா். கிரயத்தின்போது மசாக்கவுண்டருக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கியதாக வீட்டை அபகரித்து உள்ளனா். இது குறித்து மசாக்கவுண்டருக்கு தெரியவந்தது. அப்போது தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவா் கோவை மாவட்ட குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுதா, ஆரோக்கிய சாா்லஸ் ஆகியோரை தேடி வந்தனா். இந்நிலையில் அவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் கைதானவா்களிடம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் செந்தில், கணேசமூா்த்தி, ரமணிநாதன், மற்றொரு செந்தில் ஆகியோா் இருப்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.