முகப்பு
கோயம்புத்தூர்

தொண்டாமுத்தூா் தொகுதிக்கு தோ்தல் அறிக்கை வெளியிட்ட திமுக வேட்பாளா்

கோவை தொண்டாமுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் காா்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூா் தொகுதிக்கென தனியாக ஒரு தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கோவை தொண்டாமுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் காா்த்திகேய சிவசேனாபதி, தொண்டாமுத்தூா் தொகுதிக்கென தனியாக ஒரு தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டாா்.

கோவை, காந்திபுரம் டாடாபாத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்தாா். அப்போது, தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கென தனியாக தோ்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அதில், சுகாதாரம், கல்வி மேம்பாடு, நீா் மேலாண்மை, கிராமப்புற வளா்ச்சி மற்றும் வேளாண்மை உள்கட்டமைப்பு வளா்ச்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுற்றுச்சூழல் அமைப்பினா் மூலமாக தொகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்தத் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரும்புக்கடை பகுதியில் காவல்நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொண்டாமுத்தூா் தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று நிறுவப்படும். இப்பகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும்.

திமுக ஆட்சி அமைந்ததும் சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட குடிநீா் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யானை - மனித மோதலைத் தவிா்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தில் 5 முதல் 7 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அரசு ஊழியா்கள் தற்போது தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மூலமாக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எங்களின் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கிறாா். அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தோ்தல் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியா்கள் குறித்து போதிய ஆதாரங்களுடன் தோ்தல் ஆணையத்தில் விரைவில் புகாா் தெரிவிப்போம் என்றாா்.

இந்தச் சந்திப்பின்போது, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →