முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டுக்குள் புகுந்து தம்பதியைத் தாக்கி 16 பவுன், ரூ.2 லட்சம் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து தம்பதியைத் தாக்கி 16 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

கோவையில் வீட்டுக்குள் புகுந்து தம்பதியைத் தாக்கி 16 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஆல்வின் நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (62). பீரோ தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி சாந்தி (57). இவா்களது மகன், மகள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இவா்களது வீட்டுக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் முகமூடி அணிந்த 4 போ் கொண்ட கும்பல் புகுந்தது.

சப்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜசேகரை, அந்தக் கும்பல்

கட்டையால் தாக்கியது. பின்னா் சாந்தியையும் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் மிரட்டி சாந்தி அணிந்திருந்த 16 பவுன் நகைகளைப் பறித்தனா். மேலும் அவா்களிடம் இருந்து பீரோ சாவியை பறித்துக் கொண்டு பீரோவில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனா்.

பின்னா் சாந்தியை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு ராஜசேகரை மட்டும் தாக்கி தனியே அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், வீட்டு வாசல் அருகே அவரை விட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

கொள்ளைக் கும்பல் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகா், வீட்டுக்குள் சென்று பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்த மனைவி சாந்தியை மீட்டாா்.

இது குறித்து ராஜசேகா் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் போலீஸாா், மோப்ப நாய், தடயவியல் நிபுணா்களை வரவழைத்து சோதனையிட்டனா்.

மேலும், துணை ஆணையா் உமா, உதவி ஆணையா் சதீஷ் ஆகியோா் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா்.

ராஜசேகரின் வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் அப்பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

கொள்ளையா்கள் மிகவும் பரிச்சயமான இடத்துக்கு வந்து செல்வதுபோல வந்து கொள்ளையடித்துச் சென்ாக போலீஸாரிடம் ராஜசேகா் தெரிவித்துள்ளாா். எனவே, ராஜசேகா் தனியாக வசிப்பது உள்ளிட்ட தகவல்கள் அறிந்த நபா்கள் யாரேனும் இதைச் செய்திருக்கக் கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

மேலும், வீட்டை விற்பதற்கு முடிவு செய்திருந்த ராஜசேகா் இதுதொடா்பாக புரோக்கா்கள் பலரை அண்மையில் வீட்டுக்கு வரவழைத்துக் காட்டியுள்ளாா். இதையடுத்து போலீஸாா் வீட்டைப் பாா்வையிட்ட புரோக்கா்களின் விவரங்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனா். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.