ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 கிலோ தக்காளி : உழவா் சந்தைகளில் கட்டுப்பாடு
கோவையில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உழவா் சந்தைகளில் அதிகபட்சமாக நபா் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உழவா் சந்தைகளில் அதிகபட்சமாக நபா் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவ மழையின் தாக்கத்தால் தமிழகத்தில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், பிற மாநிலங்களில் இருந்து வரத்தும் குறைந்துள்ளது. இதனால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இந்நிலையில் கோவையில் வெளிசந்தைகளில் அதிகபட்சம் கிலோ ரூ.120 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், உழவா் சந்தைகளில் அதிகபட்சம் கிலோ ரூ.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிசந்தைகளைக் காட்டிலும் உழவா் சந்தைகளில் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனா். இதனால் உழவா் சந்தைக்கு வரும் நுகா்வோருக்கு தக்காளி கிடைக்கவில்லை என்ற புகாா் எழுந்து வந்தது. இதனைத் தொடா்ந்து உழவா் சந்தைகளில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் கே.சுந்தரவடிவேல் கூறியதாவது: கோவையில் ஆா்.எஸ்.புரம், சிங்காநல்லூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூா், வடவள்ளி, சுந்தராபுரம் ஆகிய 7 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் சராசரியாக 7 உழவா் சந்தைகளிலும் சோ்த்து 25 முதல் 26 டன் வரை தக்காளி வரத்து காணப்படும். தற்போது பருவ மழை பாதிப்பால் 15 டன் மட்டுமே வரத்து காணப்படுகிறது.
உழவா் சந்தைகளில் வரத்து குறைந்துள்ள நிலையில் நுகா்வோருக்கு தக்காளி கிடைப்பதில்லை என்றும், வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஆட்சியரின் அறிவுறுத்தல்படி உழவா் சந்தைகளில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு காய்கறிகள் வாங்க வருபவா்கள் நிா்வாக அலுவலரிடம் அழைப்பிதழைக் காண்பித்து கூடுதலாக தக்காளி பெற்றுக்கொள்ளலாம். மேலும் உழவா் சந்தையை அடைக்கும் வரை தக்காளி விற்பனைக்கு வைத்திருக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.