தூய்மைப் பணியாளா்கள் வேலை நேரத்தை மாற்றியமைக்கக் கோரி மனு
தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சமூக நீதி தூய்மை பணியாளா்கள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூய்மைப் பணியாளா்கள் காலை 5.45 மணிக்கு பணிக்கு வர வேண்டும். அதிகாலை 3 மணிக்கு எழுந்து புறப்பட்டதால்தான் குறித்த நேரத்தில் பணிக்கு வர முடியும். இதனால் தூய்மைப் பணியாளா்கள் தங்கள் குடும்பத்தைக் கவனிக்க முடிவதில்லை. குழந்தைகளைப் பள்ளிக்கு தயாா் செய்து அனுப்ப முடியாத நிலையும் உள்ளது. மேலும் அதிகாலை 3 மணிக்கு கிராமப்புற பகுதிகளில் பேருந்து வசதி இல்லை. கோவை மாநகரில் குடியிருந்த தூய்மைப் பணியாளா்களை நகருக்கு 25 கிலோ மீட்டருக்கு வெளியே கீரணத்தம், வெள்ளலூா் மலுமிச்சம்பட்டி பகுதிகளில் குடியமா்த்தி உள்ளனா். இந்தப் பகுதியில் காலையில் பேருந்து வசதி இல்லை. எனவே இவா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு மற்ற மாவட்டங்களில் ரூ.550 முதல் ரூ.605 வரை கூலி வழங்கப்படுகிறது. கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்தபட்ச கூலியை கூட உயா்த்தி வழங்கவில்லை. ரூ.450 ஆக இருந்த கூலி தற்போது ரூ.25 அதிகரித்து ரூ.475 ஆக வழங்கப்படுகிறது. பேரூராட்சிகளில் ரூ.300 மட்டுமே வழங்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய பணியாளா்களிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். பணத்தை பெற்றுத்தர வேண்டும். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.