தொழில் துறையினா் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் :அமைச்சா் செந்தில்பாலாஜி
தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை தொழில் கண்காட்சி துவக்க விழாவில், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.
தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை தொழில் கண்காட்சி துவக்க விழாவில், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.
கோவை கொடிசியாவில் ‘வாட்டா் இன்டெக் 2022 தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) துவங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி குத்துவிளக்கேற்றி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.
இதைத்தொடா்ந்து, அவா் பேசியதாவது: இந்த கண்காட்சியில் கட்டுமானப் பொருள்கள், மின்சார பொருள்கள், கட்டுமான இயந்திரங்கள், வாகனங்கள், விவசாய இயந்திரங்கள் என முன்னணி நிறுவனங்கள், வளா்ந்து வரும் நிறுவனங்களின் பொருள்கள் என 460 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், ரூ.100 கோடிக்கும் அதிகமான வா்த்தகம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கோவையைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்கள், இந்த கண்காட்சியின் வா்த்தகம் மூலம் பயன்பெற உள்ளனா். கோவையின் வளா்ச்சிக்கு முதல்வா் தனிக்கவனம் செலுத்தி வருகிறாா்.
கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் சாா்பில் முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளன. தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, கொடிசியா தலைவா் ரமேஷ்பாபு, துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.