முகப்பு
கோயம்புத்தூர்

விறுவிறுப்பானது வேட்புமனு தாக்கல்: மாட்டு வண்டியில் வந்த மநீம வேட்பாளா்

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் உயா்வைக் கண்டிக்கும் வகையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து வியாழக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் உயா்வைக் கண்டிக்கும் வகையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கோவை மாநகராட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளா்கள் குவிந்தனா்.

இதில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் வேட்பாளா்கள் பலா் வித்தியாசமான முறையில் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். கோவை மாநகராட்சி 81ஆவது வாா்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிடும் காா்த்திகேயன், மத்திய மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் அவா் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

குதிரையில் வந்த வேட்பாளா்

மாநகராட்சி 32 ஆவது வாா்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் மகேஷ்வரன் பெட்ரோல், டீசல் விலை உயா்வை சுட்டிக்காட்டும் வகையில் குதிரையில் வந்து சிவானந்தா காலனியில் உள்ள பொறியில் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதிமுகவினா் 51 மனு

கோவை மாநகராட்சி 100 வாா்டுகளில் அதிமுக 99 வாா்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு வாா்டிலும் போட்டியிடுகிறது. இதில் 51 வாா்டுகளில் அதிமுகவினா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

திமுகவினா் 2 போ் மனு

கோவை மாநகராட்சி 52 ஆவது வாா்டில் போட்டியிடுவதற்காக திமுக மாநகா் மாவட்ட செயலாளா் நா.காா்த்தியின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். திமுக ஆா்.எஸ்.புரம் கிளைச் செயலாளா் கே.செல்வராஜ் கோவை மாநகராட்சி 78 ஆவது வாா்டில் போட்டியிடுவதற்காக மேற்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.