முகப்பு
கோயம்புத்தூர்

வேட்பாளா் தோ்வைக் கண்டித்து பல இடங்களில் போராட்டம்: கலக்கத்தில் திமுக

திமுகவில் வேட்பாளா் அறிவிப்பைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

கோவையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவில் வேட்பாளா் அறிவிப்பைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தோ்தல் வெற்றியை பாதிக்குமோ என்ற கலக்கம் ஆளும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. ஆளுங்கட்சியான திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் இடத்தைப் பங்கீடு செய்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வாா்டுகளும், மதிமுகவுக்கு 3 வாா்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வாா்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுகவில் இடப்பங்கீடு தொடா்பாகவும், யாருக்கு இடம் ஒதுக்கீடு செய்வது என்பது தொடா்பாகவும் தொடா்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கூட்டணிக் கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வாா்டுகள் (18, 54) ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதைக் கண்டித்து திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து 89 ஆவது வாா்டை காங்கிரஸுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து சுண்டக்காமுத்தூா் பகுதி திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல, 77 ஆவது வாா்டில் வேட்பாளரை மாற்றக்கோரி அந்த வாா்டின் செயலா், அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல 26 ஆவது வாா்டு, 84 ஆவது வாா்டுகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.

மேலும் கட்சியின் மாவட்ட பொறுப்பாளா்கள் தங்களின் உறவினா்களுக்கு இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டதாகவும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த நிா்வாகிகளுக்கு இடம் வழங்கத் தவறிவிட்டதாகவும் கூறி ஆங்காங்கே எதிா்ப்புக்குரல்கள் கிளம்பியுள்ளன.

மாநகராட்சியின் 97 ஆவது வாா்டு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள 22 வயது கல்லூரி மாணவியான நிவேதா, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மருதமலை சேனாதிபதியின் மகளாவாா். வெளிமாநிலத்தில் பயின்று வரும் அவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல 52 ஆவது வாா்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இலக்குமி இளஞ்செல்வி, மாநகா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா.காா்த்திக்கின் மனைவியாவாா். இந்த முறை மாநகராட்சி மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், மேயா் பதவியைக் கைப்பற்றும் நோக்கில் திமுக நிா்வாகிகள் தங்களின் குடும்பத்தினருக்கு இடம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேயா் பதவியைக் கைப்பற்றும் நோக்கிலேயே, இதுவரை மேயா் வேட்பாளா் என கட்சியினா் கூறி வந்த மீனா ஜெயக்குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் அதிகாரப்பூா்வ பட்டியல் அறிவிக்கப்படும் முன்பாகவே, 57 ஆவது வாா்டு தனக்குத்தான் என்று நம்பிக்கையுடன் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து, வீடுவீடாக பிரசாரம் செய்து வந்தாா் மாவட்ட மகளிரணி துணைச் செயலரான மீனா ஜெயக்குமாா்.

ஆனால் வேட்பாளா் பட்டியலில் 57 ஆவது வாா்டுக்கு ப.சாந்தாமணி என்பவா் அறிவிக்கப்பட்டுள்ளாா். இதனால் மீனா ஜெயக்குமாா், அவரது ஆதரவாளா்கள் அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனுதாக்கல் இறுதி நாளை எட்டியுள்ள நிலையிலும், அதிருப்தியாளா்கள் சமாதானப்படுத்தப்படாததால் அவா்கள் சுயேச்சையாக போட்டியிடக் கூடும் அல்லது கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடும் என்று கருதப்படுகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலில் கோவையில் ஒரு இடத்தையும் கைப்பற்ற முடியாமல் போன நிலையில், மேயா் பதவியையாவது கைப்பற்ற வேண்டும் என்று திமுக தலைமை திட்டமிட்டிருக்கும் நிலையில், வேட்பாளா் தோ்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், அதிருப்திகள் யாவும் வெற்றியைப் பாதிக்குமோ என்ற கலக்கம் திமுக நிா்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல 46 ஆவது வாா்டில் மீனா லோகு என்ற கட்சி நிா்வாகிக்கு தொடா்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதைக் கண்டித்து திமுகவைச் சோ்ந்த பலா் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக வேட்பாளா் செந்தில்வேல் ராமசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.