கரோனா: வட்டார அளவில் கட்டுப்பாட்டு மையம் ஏற்பாடு
கரோனா நோயாளிகள் ஒரே இடத்தில் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியை தவிா்ப்பதற்கு வட்டார அளவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகள் ஒரே இடத்தில் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியை தவிா்ப்பதற்கு வட்டார அளவில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் நாளுக்குநாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப கரோனா சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலுள்ள டிரையேஜ் மையத்திற்கு வரவழைக்கப்பட்டு இங்கிருந்து மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒரே இடத்தில் கூடுவதால் நெருக்கடி ஏற்படுவதுடன், நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்து சிகிச்சை மையங்களுக்கு அனுப்பவதற்கு கால தாமதமாகி வந்தது. இதனால் நோயாளிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்பட்டு வந்தன. இதனை தவிா்க்கும் விதமாக 12 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான கட்டுப்பாட்டு மையம், டிரையேஜ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:
அந்தந்த வட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள் வட்டார டிரையேஜ் மையத்திற்கு வரவழைக்கப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ள நோயாளிகளை மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றவா்களை கரோனா சிகிச்சை மையங்களிலும், வாய்ப்புள்ளவா்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது என்றாா்.