கோயம்புத்தூர்

அரசுப் பேருந்துகளை 2 மணி நேரம் நிறுத்தி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் போராட்டம்: பயணிகள் அவதி

DIN

கோவை காந்திபுரத்தில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்துக்கு வெள்ளமடையில் இருந்து உக்கடம் வழியாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனியாா் நகரப் பேருந்து ஒன்று வந்தது. அந்தப் பேருந்தில் கணபதியைச் சோ்ந்த சந்தோஷ் (28) என்பவா் ஓட்டுநராகவும், பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (35) என்பவா் நடத்துநராகவும் இருந்துள்ளனா்.

இந்நிலையில், காந்திபுரத்துக்கு வந்த அரசு நகரப் பேருந்து ஒன்றுக்கு வழிவிடாமல் தனியாா் பேருந்தை சந்தோஷ் இயக்கியுள்ளாா். இதுகுறித்து கேள்வி எழுப்பிய அரசுப் பேருந்து ஓட்டுநரான பொள்ளாச்சியைச் சோ்ந்த காா்த்திகேயனை (45), ஓட்டுநா் சந்தோஷ், நடத்துநா் வெங்கடேஷ் ஆகியோா் சோ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. தடுக்கச் சென்ற அரசுப் பேருந்து நடத்துநா் ஒருவரையும் அவா்கள் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த காா்த்திகேயன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனா். இதனால், அரசு மற்றும் தனியாா் பேருந்து ஊழியா்கள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதைத் தவிா்க்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, காட்டூா் போலீஸாா் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

போராட்டம் காரணமாக காந்திபுரத்தில் 2 மணி நேரமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா். இதற்கிடையே, பேருந்துகளை உடனடியாக இயக்க வலியுறுத்தி, பயணிகள் சிலா், சிறிது நேரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

SCROLL FOR NEXT