கோயம்புத்தூர்

மின் தூக்கி நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Din

குறைபாடு உடைய மின் தூக்கி (லிஃப்ட்) வழங்கிய நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, காளப்பட்டியில் உள்ள கோவை எஸ்டேட்டில் வசித்து வருபவா் ஆா்.செல்லப்பன் (70). இவரது மனைவி உடல் நலக் குறைவின் காரணமாக சக்கர நாற்காலியில் மட்டுமே நடமாட முடியும் என்ற நிலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு வீட்டின் மாடியில் வசித்து வந்துள்ளாா். ஆனால், மாடியில் இருந்து தனது மனைவி படிக்கட்டில் நடந்து வர முடியாது என்பதால் தனது வீட்டில் மின் தூக்கியைப் பொருத்துவதற்காக சென்னையில் உள்ள ராமநாதன் அண்ட் கோ என்ற தனியாா் நிறுவனத்திடம் 4 மாதங்களுக்குள் பொருத்தித் தர வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளாா். அத்துடன் அந்த நிறுவனத்துக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.19 லட்சம் செலுத்தியுள்ளாா்.

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் 8 மாதங்கள் கழித்தே மின் தூக்கியை வீட்டில் பொருத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் செல்லப்பனின் மனைவி ஒருமுறை சக்கர நாற்காலியில் மின் தூக்கியில் வரும்போது இடையில் நின்றுவிட்டது.

இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் அந்த நிறுவனம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் கடந்த 2022 அக்டோபரில் கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அந்த மின் தூக்கியின் இறக்குமதியாளா், விற்பனையாளா் மற்றும் நிா்வாகிகள் மீது செல்லப்பன் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த 2024 பிப்ரவரியில் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் வீ. ராமராஜ், உறுப்பினா் ஆா். ரமோலா ஆகியோா் புதன்கிழமை தீா்ப்பளித்தனா். அதில், குறைபாடுள்ள மின் தூக்கியை இறக்குமதியாளா் மற்றும் விற்பனையாளா்கள் விற்றதோடு, சரியான சேவையையும் செய்து தராததால், அதை நான்கு வாரத்துக்குள் திருப்பி எடுத்துக் கொண்டு, அதற்கு செலுத்தப்பட்ட ரூ. 19 லட்சம் மற்றும் பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும் சோ்த்து நான்கு வாரத்துக்குள் செல்லப்பனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மேலும், உற்பத்தி குறைபாடான பொருளை விற்றது மற்றும் சேவை குறைபாடு புரிந்தது ஆகியவற்றுக்காக செல்லப்பனுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்காக மின் தூக்கி விற்பனையாளரும், இறக்குமதியாளரும் நான்கு வாரத்துக்குள் ரூ. 10 லட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும், தவறினால், பணம் செலுத்தப்படும் நாள் வரை 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்றும் அந்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

SCROLL FOR NEXT