கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் புதன்கிழமை (ஜூலை 3) சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி தொடங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024 -2025- ஆம் ஆண்டுக்கான இளமறிவியல் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூன் 23- ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை பொதுப் பிரிவு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் மூலம் மொத்தம் 4,645 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு அவா்கள் பெற்ற தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தற்காலிக சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டமாணவ - மாணவிகள், தங்களின் அசல் 10, 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றுடன் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 3- ஆம் தேதி தொடங்கி 6 -ஆம் தேதி வரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறுகிறது.
இது தொடா்பான தகவல், தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், தோ்வானவா்களின் பட்டியல் இணையதளத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள பல்கலைக்கழகம், இது தொடா்பான விவரங்களை 94886 35077, 94864 25076 என்ற எண்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.