கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் புதன்கிழமை விடுக்கப்பட்டது.
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் புதன்கிழமை விடுக்கப்பட்டது.
கோவையில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியாா் தங்கும் விடுதிகள் மற்றும் சா்வதேச விமான நிலையத்துக்கு கடந்த சில மாதங்களாக தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விமான நிலைய மேலாளா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு வந்த மின்னஞ்சலில், கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், பீளமேடு போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா், மோப்ப நாய் பிரிவினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அதிகாலை நேரம் என்பதால் விமான நிலையத்தில் கூட்டம் மிகக்குறைவாக இருந்தது. சுமாா் 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.
மேலும், கோவையில் தங்கியிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் காலை 11.35 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், விமான நிலையத்துக்கான வெடிகுண்டு மிரட்டல் ‘அவுட்லுக்’ என்ற இணையதளத்தில் இருந்து ‘அபிஜித்’ என்ற பெயரில் வந்துள்ளது. வழக்கம்போல வெளிநாடுகளிலிருந்து வருவதைப்போலவே இந்த மின்னஞ்சலும் வந்துள்ளது.
தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகா்களைத் தாக்கியும், மறைந்த முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் மரணம் குறித்தும் இந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றனா்.
வெடிகுண்டு மிரட்டலால் கோவை சா்வதேச விமான நிைலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் காலை 11.35 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.