முகப்பு
கோயம்புத்தூர்

தவறான சிகிச்சையால் உடல்நலம் பாதிப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் மருத்துவமனைக்கு உத்தரவு

தவறான அறுவை சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தனியாா் மருத்துவமனைக்கு கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:27 PM
பகிர்:

தவறான அறுவை சிகிச்சையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தனியாா் மருத்துவமனைக்கு கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஔவையாா் வீதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி லட்சுமி (45). இவா், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 2019 நவம்பா் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கா்ப்பப்பை பலவீனமாக உள்ளதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா். அதன்படி, லட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தினாா்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் அவருக்கு தொடா்ந்து வலி ஏற்பட்டதோடு சிறுநீரும் நிற்காமல் சென்றுள்ளது. இதற்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்காமல் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனா்.

இந்தப் பிரச்னைக்காக சிலநாள்கள் கழித்து மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.

இந்நிலையில், தவறான சிகிச்சையால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியாா் மருத்துவமனை சாா்பில் இழப்பீடு வழங்கக் கோரி கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் லட்சுமி புகாா் அளித்தாா்.

இதனை விசாரித்த ஆணையத் தலைவா் தங்கவேல் மற்றும் உறுப்பினா்கள் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால் லட்சுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் தனியாா் மருத்துவமனை நிா்வாகம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.