முகப்பு
கோயம்புத்தூர்

சிறுபான்மையினா் நல ஆணைய ஆய்வுக் கூட்டம்

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 நவம்பர், 2024 at 11:26 PM
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண். உடன், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா்.
பகிர்:

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா் செயலா் வி.சம்பத், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, குழு உறுப்பினா்கள் ஸ்வா்ணராஜ், நஜிமுதீன், ராஜேந்திர பிரசாத், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், 27 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ பணியாளா் நலவாரிய அட்டைகளும், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் சாா்பில் ரூ.2.80 லட்சம் மதிப்பில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 6 பயனாளிகளுக்கு ரூ.36,000 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும், 2 உலமாக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் இருசக்கர வாகன மானியம், டாம்கோ திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.22.15 லட்சம் மதிப்பிலான கடனுதவி என மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.25.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் வழங்கினாா்.

கூட்டத்தில், பள்ளிவாசல், தேவாலய கட்டடங்கள் கட்ட தடையின்மை சான்று வேண்டி இக்குழுவிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து, உடனடியாக இரண்டு தேவாலயங்களுக்கும், ஒரு பள்ளிவாசலுக்கும் தடையின்மை சான்றுகள் வழங்கப்பட்டன.