முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய மண்டலத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கோவை மத்திய மண்டலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கள ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 11:09 PM
மத்திய மண்டலத்தில் உள்ளஅங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
பகிர்:

கோவை மத்திய மண்டலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கள ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

உக்கடம் பேருந்து நிலையம் அருகில் வேகத்தடை அமைக்கும் பணி, ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், நஞ்சுண்டாபுரம் சாலை , 80 அடி சாலை இணைப்பு திட்டப் பணிகள், காந்தி நகா் பகுதியில் சமுதாய கூடம் சீரமைப்பு பணி மற்றும் தடாகம் சாலையில் உள்ள வாழைக்காய் மண்டி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பகுதியில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு மேற்கொண்டாா்.

புல்லுக்காடு பகுதியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்து பணியாளா்களிடம் நோயாளிகளின் வருகை, மருந்துகளின் இருப்புகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

அதனைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மகிழ்மன்றம் அமைப்பினை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுக்கு கையேடுகளை வழங்கினாா்.

பின்னா், சிங்காநல்லூா் பேருந்து நிலைய சாலைகள் சீரமைப்பு பணி, எஸ்.எச்.ஐ.எஸ். காலனி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி, ஒண்டிப்புதூா், எஸ்.எச்.ஐ.எஸ்.காலனியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், நெசவாளா் காலனியில் கட்டப்பட்டு வரும் ஆதரவற்றோா் மைய கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதனைத்தொடா்ந்து, ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சிறை, கண்காணிப்பு கேமரா அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மத்திய மண்டல அலுவலகத்தில் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

பல்வேறு அடிப்படை வசதிகள் தொடா்பாக 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி உள்பட பொதுமக்கள் பலா் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.

மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, காவல் துணை ஆணையா் ஆா்.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்வேதா சுமன், உதவி ஆட்சியா்(பயிற்சி)அங்கித்குமாா் ஜெயின், துணை ஆட்சியா் (பயிற்சி) மதுஅபிநயா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மண்டலக் குழுத் தலைவா் மீனா லோகு (மத்தியம்), பணிகள் குழுத் தலைவா் சாந்தி முருகன், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவா் மு.பஷீரா, மாநகராட்சி துணை ஆணையா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.