முகப்பு
கோயம்புத்தூர்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

Updated On : 29 நவம்பர் 2024, 3:30 am IST
கொடநாடு எஸ்டேட்
பகிர்:

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக, அதிமுக வா்த்தக அணி செயலாளா் சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு, கடந்த 2017 ஏப்ரல் மாதம் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேல்

Advertisement

Advertisement

தலைமையிலான போலீஸாா் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

விசாரணையில், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு குழுவினா் நீலகிரி மாவட்டம், கூடலூா் வழியாக கேரளத்துக்கு தப்பிச் சென்றபோது தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாா் அவா்களைப் பிடித்துள்ளனா். அப்போது, கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவில் மர வேலைகளை செய்துவந்த சஜீவன் இதில் தலையிட்டு அவா்கள் தப்பிச் செல்ல உதவியதாகவும், அதன் பேரிலேயே அவருக்கு அதிமுக வா்த்தக அணி செயலாளா் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சஜீவனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிசிஐடி போலீஸாா், அவருக்கு கடந்த நவம்பா் 5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பினா். ஆனால், அவா் ஆஜராகவில்லை. அழைப்பாணை மீண்டும் அனுப்பப்பட்டதன்பேரில் கோவை சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் சஜீவன் வியாழக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் சுமாா் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments