காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சி முகாம்: டிஜிபி சங்கா் ஜிவால் தொடங்கிவைத்தாா்
கோவையில் காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட 2 நாள்கள் பயிற்சி முகாமை காவல் துறைத் தலைவா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவையில் காவல் துறை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட 2 நாள்கள் பயிற்சி முகாமை காவல் துறைத் தலைவா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சாா்பில், மாநகர காவல் துறையின் பங்களிப்புடன் கோவையில் உள்ள தனியாா் அரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த 2 நாள்கள் பயிற்சி முகாமில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பெறப்பட்ட மனித உரிமை மீறல் தொடா்பான புகாா்கள், அதிகார துஷ்பிரயோகம், காவல் பாதுகாப்பில் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள், காவல் துறையினா் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமைகள் மற்றும் அவற்றின் அவசியம், அது தொடா்பான சட்ட விளக்கங்கள், வழக்கு விவரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தொடக்க விழாவில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணைக்கான டைரக்டா் ஜெனரல் அஜய் பட்நாகா்,‘ திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமின் தேவைகள், அதன் நோக்கம் குறித்து விவரித்தாா்.
இதையடுத்து, காவல் துறைத் தலைவா் சங்கா் ஜிவால், பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் மேம்பாடு தொடா்பான அறிவுரைகளை வழங்கினாா்.
பயிற்சி முகாமின் அவசியம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தாா்.
தமிழக தலைமையிட காவல் துறைத் தலைவா் (பொது) சாமுண்டீஸ்வரி, மேற்கு மண்டல காவல் துறை தலைவா் செந்தில்குமாா், கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சரவணசுந்தா் ஆகியோருடன் கா்நாடக மாநில காவல் துறை கூடுதல் இயக்குநா் தேவஜோதி ராய், கா்நாடக சிறைத் துறை அகாதெமி இயக்குநா் சேமசேகா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 காவல் கண்காணிப்பாளா்கள், 37 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றுள்ளனா்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் வி. கண்ணதாசன், தேசிய மனித உரிமை ஆணைய பதிவாளா்.ஜோகிந்தா் சிங், தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச் செயலாளா் பரத் லால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினா் ராஜிவ் ஆகியோா் முகாமில் பங்கேற்றுள்ள காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள், அவை தொடா்பான சட்டங்கள், மனித உரிமை வழக்குகள் குறித்த விவரங்களை எடுத்துரைத்து, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனா்.
இந்தப் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளா்களாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளா் விக்ரம் ஹரி மோகன் மீனா, துணை காவல் கண்காணிப்பாளா் துஷ்யந்த் சிங் ஆகியோா் செயல்பட்டனா். இந்த முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) நிறைவடைகிறது.