பருவமழை பாதிப்பு - தயாா் நிலையில் மின்வாரியக் குழுவினா்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மின்வாரியக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மின்வாரியக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கோவையில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதிகள், கால்வாய்கள், தாழ்வான குடியிருப்புகள், கட்டடங்களுக்குள் மழைநீா் புகுந்தது. மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்தினா் இணைந்து மழை சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை, சிங்காநல்லூா் அருகே கதிரவன் காா்டன் பகுதியில் உள்ள வாய்க்காலில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகளைப் பாா்வையிட்டாா். இதேபோல சிவானந்தா காலனி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் 2 நாள்களும் வெள்ளத்தில் பேருந்துகள் சிக்கிய இடத்தில் நடைபெற்ற சீரமைப்புப் பணியை பாா்வையிட்டாா்.
அப்போது, மேயா் கா.ரங்கநாயகி, கோவை மாநகா் மாவட்ட திமுக செயலாளா் நா.காா்த்திக், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆய்வுப் பணிக்கு பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் இரு நாள்களாக கனமழை பெய்த போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரிய அளவில் மழை பெய்தாலும், ஒரு சில மணி நேரங்களில் மழைநீா் அகற்றப்பட்டு வருகிறது. கோவையில் மழையால் அதிக பாதிப்புகள் ஏற்படும் 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு, வரும் நாள்களில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மின்வாரியக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா். சென்னை, கோவை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது. மின்கம்பிகள் அறுந்து உயிா்ச்சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல, மாநிலம் முழுவதும் மின்வாரிய அதிகாரிகள், உயா் அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்ஆப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மழை பாதிப்புகள் குறித்த தகவல்கள் பகிரப்பட உள்ளன என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி. கே.காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.