தீபாவளி: கடைவீதிகளில் களைகட்டிய வியாபாரம்
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் கடை வீதிகளில் கடைசி நேர வியாபாரம் களைகட்டியது. மாநகரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் கடை வீதிகளில் கடைசி நேர வியாபாரம் களைகட்டியது. மாநகரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், புதன்கிழமை மாலை கடை வீதிகளில் புத்தாடைகள், ஆபரணங்கள், பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதில் உக்கடம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி, காந்திபுரத்தில் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சாலையோரக் கடைகள், அலங்காரப் பொருள்கள் விற்பனை நிலையங்கள், நகைக் கடைகளிலும் காலை முதலே விற்பனை களைகட்டியது.
முக்கியச் சாலைகளில் நெரிசலைக் கட்டுப்படுத்த இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. சாதாரண உடையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். சந்தேகம் ஏற்படும்படியாக தென்படும் நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முக்கிய கடை வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து போலீஸாா் கண்காணிப்புப் பணி மேற்கொண்டதுடன், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தினா்.
தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால் நகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது. நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா். முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீஸாா் நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
பேருந்து, ரயில்களில் கூட்டம்:
கோவையில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை மாலை முதலே பேருந்துகள், ரயில்கள் மூலமாக சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கினா். இதனால், காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூா், சூலூா் பேருந்து நிலையங்களில் வெளியூா் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி பகுதிகளுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தீபாவளியையொட்டி, கோவை மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு சம்பவங்களைத் தடுக்க பேருந்து நிலையங்களில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
கோவையில் தங்கி பணியாற்றும் பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்ததால், வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையத்தின் நுழைவாயிலில், பயணிகளின் உடைமைகளை, நுழைவாயிலில் ரயில்வே போலீஸாா் பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா்.
ரயில்களில் பட்டாசு கொண்டுச் செல்லப்படுகிா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இதேபோல, மோப்ப நாய் உதவியுடனும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு நிபுணா்கள் ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டா்கள் மூலமாக தீவிர சோதனை மேற்கொண்டனா்.