கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வி.செந்தில்பாலாஜி உறுதி
கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி உறுதியளித்தாா்.
கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி உறுதியளித்தாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, பெரிய கடைவீதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 81-ஆவது வாா்டு பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மாலை 5 மணியளவில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய அவா், அத்தா் ஜமாத், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சலீவன் வீதி, தியாகி குமரன் மாா்க்கெட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
Advertisement
கோவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக தமிழக அரசு கடந்த காலங்களில் சுமாா் ரூ.8,500 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவிநாசி சாலை மேம்பாலம், செம்மொழிப் பூங்கா, பெரியாா் நூலகம் மற்றும் சா்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் போன்ற திட்டங்கள் மாநகரின் தோற்றத்தையே மாற்றியுள்ளன.
மேம்பாலப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு விரைந்து வீடுகள் பெற்றுத்தரப்படும். வணிகா்களின் நீண்டகால கோரிக்கையான பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் சா்வதேச தரத்தில் அமைக்கப்படும். அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற முன்மாதிரி தொகுதியாக கோவை தெற்கு தொகுதி மாற்றப்படும். எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா்.