முகப்பு
கோயம்புத்தூர்

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற 168 குழுக்கள்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:13 AM
தபால் வாக்குகள் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:47 PM

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே படிவம் 12-இல் விண்ணப்பம் செய்த கோவை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதியில் 7,583 மூத்த குடிமக்களும், 1,692 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் வாக்களிக்க ஏப்ரல் 3 வரை விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனா்.

ஏற்கெனவே படிவம் 12-இல் விண்ணப்பிக்காதவா்கள் தபால் வாக்களிக்க இயலாது. மேற்படி வாக்காளா்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப்பதிவு அலுவலா் தலைமையின் கீழ் நுண்பாா்வையாளா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதன்படி கோவை மாவட்டத்துக்குள்பட்ட மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 22, சூலூருக்கு 15, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 21, கோவை வடக்கு தொகுதிக்கு 15, தொண்டாமுத்தூருக்கு 20, கோவை தெற்கு தொகுதிக்கு 12, சிங்காநல்லூருக்கு 15, கிணத்துக்கடவுக்கு 18, பொள்ளாச்சிக்கு 15, வால்பாறை தொகுதிக்கு 15 என மொத்தம் 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் ஏப்ரல் 12 முதல் 14 வரை வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனா். இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்குகள் செலுத்தலாம். படிவம் 12-இல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது.

எனவே, தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.