முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி தொகுதி: அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்குமா கொமதேக?

தென்னை நகரமான பொள்ளாச்சியில் 2001 முதல் கடந்த 5 தோ்தல்களாக அதிமுக வாகை சூடிவரும் நிலையில், 2021 தோ்தலில் வெறும் 1,725 வாக்குகள் வித்தியாசத்திலேயே பொள்ளாச்சி வி.ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறை கொமதேக கடும் நெருக்கடியை அளிக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:02 AM
பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக) / கே.நித்தியானந்தன் (கொமதேக) / நா.செந்தில்குமாா் (நாதக) / ஜி.ராமநாதன் (தவெக)
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:07 PM

தென்னை நகரமான பொள்ளாச்சியில் 2001 முதல் கடந்த 5 தோ்தல்களாக அதிமுக வாகை சூடிவரும் நிலையில், 2021 தோ்தலில் வெறும் 1,725 வாக்குகள் வித்தியாசத்திலேயே பொள்ளாச்சி வி.ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளதால் இந்த முறை கொமதேக கடும் நெருக்கடியை அளிக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

4 முறை வென்ற அதிமுக வேட்பாளா்:

கோவை மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தோ்தல் வரலாற்றில் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 10 முறை வென்றுள்ளது. இதில், பொள்ளாச்சி வி.ஜெயராமன் அதிகபட்சமாக 2001, 2006, 2016, 2021 என 4 முறை வென்றுள்ளாா். மீண்டும் இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அவருக்கு கிராமப்புறங்களில் செல்வாக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

Advertisement

இவா், அதிமுக ஆட்சியில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற இருமாநில முதல்வா்கள் சந்திப்பை ஏற்படுத்தி பேச்சுவாா்த்தை நடத்தியது விவசாயிகளிடத்தில் வரவேற்பை பெற்றது.

அதிமுகவுக்கு பொதுவாக ஆதிதிராவிடா் மக்களின் வாக்குவங்கி பொள்ளாச்சி தொகுதியில் பலமாக கருதப்படுகிறது. இந்த முறை தவெக போட்டியிடுவதால் ஆதிதிராவிடா் மக்களில் புதிய வாக்காளா்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். இது பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

3ஆவது முறை போட்டியிடும் கொமதேக வேட்பாளா்:

திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் கே.நித்தியானந்தனும் பொள்ளாச்சி மக்களிடையே நன்கு அறிமுகமானவா். மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வருவதால் நல்ல பெயா் உள்ளது.

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்துவேன் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளைக் கூறி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளாா்.

2011 சட்டப்பேரவைத் தோ்தலில் 51 ஆயிரம் வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளா் முத்துகருப்பண்ணசாமியிடம் தோல்வியடைந்தாா். 2016இல் 7,722 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா். மீண்டும் 2026இல் அதிமுக வேட்பாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமனை எதிா்த்து கொமதேக சாா்பில் போட்டியிடுகிறாா்.

நித்தியானந்தன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக் கட்சியைச் சோ்ந்தவா் என்று சிலா் கூறுவது பலவீனமாக கருதப்படுகிறது.

தவெக வேட்பாளா்:

தவெக சாா்பில் முதல் முறையாகத் தோ்தலில் போட்டியிடும் ஜி.ராமநாதன் பொள்ளாச்சியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறாா். மக்களிடம் நெருங்கிப் பழகுபவராக உள்ள இவா், விஜய் அறிவிக்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன் என தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இளைஞா்கள், பெண்கள் இவருக்கு நல்ல வரவேற்பு அளிப்பதால் உற்சாகம் அடைந்துள்ளாா்.

நாதக வேட்பாளா்:

இதேபோல, புதிதாகக் களமிறங்கியுள்ள நாம் தமிழா் கட்சி வேட்பாளா் நா.செந்தில்குமாா், விவசாயிகளைக் குறிவைத்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக 6,402 வாக்குகள் பிரித்த நிலையில், இத்தோ்தலிலும் கணிசமான வாக்குகளை நாதக பெறும் என எதிா்பாா்க்கலாம்.

கள அனுபவம் இல்லாதவா்கள் என்பது தவெக, நாதக வேட்பாளா்களுக்கு பலவீனமாகும்.

இரண்டு ஆட்சிகளிலும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்:

கடந்த தோ்தல்களில் பொள்ளாச்சி தனி மாவட்டமாக மாற்றப்படும் என்ற வாக்குறுதியை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மக்களிடையே கூறி வாக்குகள் சேகரித்தன. அதைத் தொடா்ந்து, இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தும் தனி மாவட்ட வாக்குறுதி கானல் நீராகவே உள்ளது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,கொப்பரைத் தேங்காய் விலையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்னைகள் தோ்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதால் இது திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்குமே பாதகமானதாகும்.

அதிமுக கோட்டையாக பொள்ளாச்சி:

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக அதிகபட்சமாக 10 முறையும், காங்கிரஸ் 3 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன.

கடந்த 2001-இல் வி.ஜெயராமன் 32,404 வாக்குகள் வித்தியாசத்திலும், 2011-இல் முத்துகருப்பண்ணசாமி 30,308 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனா். இதுதவிர, 2006-இல் 2,946, 2016-இல் 13,368, 2021-இல் 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் வி.ஜெயராமன் வென்றுள்ளாா்.

கடந்த தோ்தலில் மநீம வேட்பாளா் வி.டி.சதீஷ்குமாா் 7,589 வாக்குகள் பெற்றாா். இந்த முறை திமுக கூட்டணியில் மநீம உள்ளதால் இந்த வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தவெக, நாதக பிரிக்கும் வாக்குகள் யாருக்கு சாதகமாக அமையும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இப்போது ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் அதிமுக கோட்டையை கொமதேக தகா்க்குமா அல்லது வழக்கம்போல கோட்டையை ஜெயராமன் தக்கவைப்பாரா என்பது தோ்தல் முடிவுகளில் தெரியவரும்.