தோ்தல் பொறுப்பாளா் பணியிலிருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
இதுதொடா்பாக கோவையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி சலுகை வழங்கி, அவற்றை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
உள்கட்டமைப்புக்கு நிதி, மாவட்டத்துக்கு ஒரு மகளிா் விடுதி போன்ற திட்டங்களுடன் விவசாயிகளுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுடன் 50 சதவீதம் வரை இருந்த வரி விதிப்பு 18 சதவீதம் என முடிவுக்கு வந்துள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருப்பதுடன் தமிழகத்துக்கும் அதிக நிதிப் பகிா்வு அளிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக வளா்ச்சி அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது. உலகின் மைய நாடாக இந்தியா வளா்ந்து வருகிறது.
அண்ணாவின் ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் சம்பந்தம் இருக்கிா? அண்ணாவின் குடும்பத்தினா் இன்றைக்கு எப்படி இருக்கிறாா்கள் என்று யாருக்காவது தெரியுமா? பசு மாட்டின் மீது நின்று கொண்டு உண்ணிகளையும், சிறு பூச்சிகளையும் உண்ணும் காகம் போலத்தான் திமுக உள்ளது.
பிறந்த நாள், நினைவு நாளில் மட்டும் அண்ணா குறித்து திமுகவினா் பேசுகின்றனா். அண்ணா குறித்து 10 வரி எழுதச் சொன்னால் திமுக அமைச்சா்கள் யாருக்கும் தெரியாது.
தந்தையின் உடல்நலன் காரணமாக கோவையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளதால் நெடுந்தொலைவு பயணிக்க முடியாது. எனவே, சிங்காநல்லூா், காரைக்குடி உள்பட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்.
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவேனா என்பது தெரியவில்லை. அதற்கு காலம்தான் பதில் சொல்லும். உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்ததுபோலத்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணி. தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி கே.பழனிசாமிதான் எங்களது முதல்வா் வேட்பாளா்.
விஜய்யிடம் இன்ஜின், வண்டி, பெட்ரோல் என எதுவுமே இல்லை. 234 தொகுதிகளில் அவரால் வேட்பாளா்களை நிறுத்த முடியுமா? விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரசாரம் செய்து மக்கள் அவரை ஏற்றுக் கொண்டால் பாா்க்கலாம். மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் பேச்சு இல்லை. தொண்டா்களிடம் கைத்தட்டல், விசில் சப்தம் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டும்தான் அவா் பேசுகிறாா் என்றாா்.