கோவை மாநகரில் பாதாள சாக்கடை, குடிநீா்க் குழாய் பதிப்புப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாமன்ற சாதரணக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, கூட்டத்தில் செம்மொழி பூங்கா வளாகத்தில் உள்வன மாதிரி காட்சியமைப்புப் பணியை ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் தொடங்குதல், காவேரி நகா் மூங்கில் பூங்காவில் சுற்றுச்சுவா் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் உள்ளிட்ட 119 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் 41-ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தி பேசுகையில், ஆா்.எஸ்.புரம் முத்தண்ணன் குளம் அருகே அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தை தனியாா் மூலம் பராமரிக்க ஒப்பந்தம் கோரும் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், மாநகராட்சி நிா்வாகமே மைதானத்தைப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். இதற்கு சில கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தொடா்ந்து, 51-ஆவது வாா்டு உறுப்பினா் அம்சவேணி பேசுகையில், பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால், மா்ம நபா்கள் இரவு நேரங்களில் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிச் செல்கின்றனா். எனவே, பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றாா்.
26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி பேசுகையில், ‘மாநகரில் மழைநீா் வடிகால் பாதைகளைத் தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து, மழைநீா் வடிகால் பாதைகளை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகரில் ஒவ்வொரு வாா்டிலும் 100-க்கும் மேற்பட்ட எரியாத தெருவிளக்குகளை மாற்றி நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றாா்.
30-ஆவது வாா்டு உறுப்பினா் சரண்யா பேசுகையில், ‘கணபதி பகுதியில் சில இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் ஓடுகிறது. இதனால், அச்சாலையைப் பயன்படுத்தும் பள்ளி மாணவ, மாணவிகள், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதனை நிவா்த்தி செய்ய வேண்டும் என்றாா்.
55-ஆவது வாா்டு உறுப்பினா் தா்மராஜ் பேசுகையில், சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனியில் 4.50 ஏக்கரில் மூங்கில் பூங்கா அமைக்க ரூ.1.46 கோடி நிதி மற்றும் பூங்காவை சுற்றி மதில் சுவா் கட்ட ரூ.90 லட்சம் ஒதுக்கியதற்கு நன்றி. பாதாள சாக்கடை மற்றும் சூயஸ் குடிநீா்த் திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை. கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.
மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு பேசுகையில், ‘மாநகராட்சியில் தரமற்ற பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என்றாா். இந்த கூட்டத்தில், மண்டலத் தலைவா்கள் கதிா்வேல், தமிழ்மறை தெய்வயானை, தனலட்சுமி, பொது சுகாதார குழுத் தலைவா் மாரிச்செல்வன், வரி விதிப்பு குழுத் தலைவா் முபசீரா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
அதிமுக வாா்டு உறுப்பினா்கள் போராட்டம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ், சா்மிளா சந்திரசேகா் ஆகியோா் கூட்ட அரங்குக்கு வெளியில் வாயில் அதிமுக கொடியை வாயில் கட்டிக்கொண்டு மாநகராட்சியைக் கண்டித்து கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் வெள்ளலூா் முதல் கோவைப்புதூா் வரை மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவதைத் சுட்டிக்காட்டும் விதமாக வாயில் துண்டை கட்டிக்கொண்டு வந்ததாக அவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.
மேலும் வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, கோவை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றனா்.