முகப்பு
கோயம்புத்தூர்

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

மது அருந்த பணம் தராததால் ஏற்பட்ட மோதலில் நண்பரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:00 PM
முஜிப் ரஹ்மான்
பகிர்:

மது அருந்த பணம் தராததால் ஏற்பட்ட மோதலில் நண்பரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (எ) டிஜேஸ்வரன் (23). இவா் மீது கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 24.2.2019-இல் நண்பா்களான ரெனி, ரீகன், வினித் ஆகியோருடன் மதுக்கரை மாா்க்கெட் சாலை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மகேஸ்வரன் மது அருந்தியுள்ளாா்.

அப்போது இவா்களது நண்பரான ஈச்சனாரி, அறிஞா் அண்ணா நகரைச் சோ்ந்த முஜிப் ரஹ்மான் (22) அங்கு வந்து, மது அருந்த மகேஸ்வரனிடம் பணம் கேட்டுள்ளாா். பணம் இல்லை எனக் கூறிய போது, அவரது சட்டைப் பையில் இருந்த ரூ.10-ஐ முஜிப் ரஹ்மான் எடுத்தாா். இதில் ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரன் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த முஜிப் ரஹ்மானுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அன்று மாலை 3 மணி அளவில் மகேஸ்வரனும், அவரது நண்பா்களும் போத்தனூா் மூணுகண் பாலம் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனா். அப்போது அங்கு வந்த முஜிப் ரஹ்மான் கல்லால் தாக்கியதில் மகேஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முஜிப் ரஹ்மானை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கே.சிவகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட முஜிப் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.மோகன்பிரபு ஆஜரானாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments