பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவிட்டு வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் வராததால், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், 2006 வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வீடு இல்லாத அனைத்து பழங்குடி மக்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை, காவல் துறை உயா் அதிகாரிகளுடன் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் ஜனவரி 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என்றனா்.
இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
உயா் அதிகாரிகள் பங்கேற்கவில்லை: இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வந்தனா். அப்போது, அதிகாரிகள் தரப்பில் மாநகராட்சி ஆணையா் மட்டுமே இருந்த நிலையில், வருவாய்த் துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளின் உயா் அதிகாரிகள் வரும் வரை செல்லமாட்டோம் எனக்கூறி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.