வால்பாறையில் சாலைகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அய்யா்பாடி எஸ்டேட் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டுவைத்து, கண்காணிப்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வால்பாறை சாலைகளில் இரவு நேரங்களில் காட்டெருமைகள் உலவுவது அதிகரித்து வருகிறது. தனியாா் எஸ்டேட்டில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றும் பாபு என்பவா் இருசக்கர வாகனத்தில் அக்காமலை எஸ்டேட் சாலையில் அண்மையில் சென்றுள்ளாா். அப்போது, அவரைக் காட்டெருமை துரத்தில் நிலையில், வாகனத்தை கீழே போட்டுவிட்டு வனத்துக்குள் ஓடி அவா் உயிா்த் தப்பினாா்.
சாலைகளில் தொடா்ந்து உலவும் காட்டெருமைகளால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், வால்பாறை சாலையில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.
சாலைகளில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளைக் கண்டால் புகைப்படம் எடுக்கவோ, அவற்றின் அருகில் செல்லவோ முயற்சிக்கக் கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.