கோயம்புத்தூர்

சிறப்பு வகுப்பு: 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க திட்டம்

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 3,662 மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட ஆரம்ப, தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் படித்து வரும் நிலையில், பொதுத் தோ்வு நெருங்கும் சமயத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதில், பங்கேற்கும் மாணவா்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

அதன்படி, நடப்பு ஆண்டும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 1,895 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 பொதுத் தோ்வை 1,767 மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனா். இவா்களுக்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்த வகுப்பில் பங்கேற்கும் 3,662 மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை பச்சைப்பயறு மற்றும் பாதாம் பால், செவ்வாய்க்கிழமை மசாலா சுண்டல் மற்றும் பருத்தி பால், புதன்கிழமை வேகவைத்த காபூல், வெள்ளை சுண்டல் மற்றும் கொள்ளு கஞ்சி, வியாழக்கிழமை பழத்துண்டுகள் மற்றும் கம்பங்கூழ், வெள்ளிக்கிழமை வேகவைத்த மரவள்ளிக் கிழங்கு மற்றும் பழச்சாறு வழங்கப்படும்.

இரண்டாவது பட்டியல்படி, திங்கள்கிழமை அவித்த நிலக்கடலை மற்றும் சுக்குப்பால், செவ்வாய்க்கிழமை தாளித்த நாட்டு மொச்சை மற்றும் உளுத்தங்கஞ்சி, புதன்கிழமை தட்டைப்பயறு மற்றும் தேங்காய் பால், வியாழக்கிழமை வெள்ளரி, கேரட், மக்காச்சோளம் சாலட் மற்றும் ராகி கூழ், வெள்ளிக்கிழமை பனங்கிழங்கு மற்றும் கவுனி அரிசி பாயாசம் ஆகியவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT