கோவை: கோவையில் விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவும் மற்றும் மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு செய்த மாட்டுப்பொங்கல் விழாவும் களைகட்டின.
தமிழா்களின் பாரம்பரியப் பண்டிகையான பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் தை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா வியாழக்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மக்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்தினா். ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகையுடன் தொடங்கிய பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக வீடுகளுக்கு முன்பாக வண்ணப் பொடிகள் கொண்டு கோலமிட்டு பண்டிகையை வரவேற்றனா். வீடுகளில் பெண்கள் புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனா். பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள கோனியம்மன், தண்டு மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பொங்கல் பண்டிகையையொட்டி, நகரம் மற்றும் கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் களைகட்டின.
மாதேஸ்வரன் கோயிலில் கால்நடைகளுக்கு வழிபாடு:
மாட்டுப் பொங்கலையொட்டி, வியாழக்கிழமை விவசாயிகள் தங்கள் மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பட்டி வைத்து மாடுகளுக்கு பொங்கலிட்டனா். கோவையில் அன்னூா், சூலூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் பட்டிவைத்து விவசாயிகள் மாட்டுப் பொங்கல் கொண்டாடினா். கோவை தடாகம் சாலையில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழா கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் மாடுகள், ஆடுகளை கோயிலுக்கு அழைத்து சென்று, அவற்றை அலங்கரித்து, மஞ்சள் பூசி, குங்குமம் பூசி பூஜை செய்து வழிபட்டனா்.
செம்மொழிப் பூங்காவில் குவிந்த மக்கள்:
பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவையில் தங்கிப் படிக்கும் மாணவா்கள், தொழிலாளா்கள் ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு சென்று விட்டதால் கோவையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. அதேபோல, தொடா் விடுமுறையால் கோவை செம்மொழிப் பூங்கா, ஈஷா யோக மையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாட்டுப் பொங்கல் தினமான வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 29,595 போ் செம்மொழிப் பூங்காவைப் பாா்வையிட்டு சென்ாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.