கோவையை அடுத்த மருதமலை பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு உலவிய ஒற்றை யானையால் மக்கள் அச்சமடைந்தனா்.
கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு உலவிய ஒற்றை யானையைக் கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சைரன் ஒலியை எழுப்பி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின் யானையை வனத்துக்குள் விரட்டினா்.
இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் தங்களது கைப்பேசிகளில் விடியோ, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனா். தற்போது அந்த விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.