முகப்பு
கோயம்புத்தூர்

உதகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Updated On : 7 ஜூலை 2026, 3:27 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நீலகிரி மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் - உதகை, குன்னூா் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே பொது மக்கள் தொடா்பு அலுவலா் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆண்டு முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனா்.

குறிப்பாக, வார இறுதி நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதைக் கவனத்தில் கொண்டு பயணிகளின் நலனுக்காக சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேட்டுப்பாளையம்- உதகை வாராந்திர சிறப்பு ரயில்கள்: ஜூலை 10-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையம் - உதகை சிறப்பு ரயில் (வண்டி எண் 06171) இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு உதகையைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, உதகை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06172) ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை சனி, திங்கள்கிழமைகளில் இயக்கப்படும்.

இந்த ரயில் உதகையில் இருந்து காலை 11.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும்.

மேட்டுப்பாளையம் - குன்னூா் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளும், குன்னூா் - உதகை இடையே முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளும் இருக்கும்.

உதகை- குன்னூா் கூடுதல் சேவைகள்: உதகையில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண் 06176) ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 2 வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு குன்னூரைச் சென்றடையும்.

குன்னூரில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண் 06199) ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 3 வரை சனி, திங்கள்கிழமைகளில் காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு உதகையை வந்தடையும். இந்த ரயிலில் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளும் உள்ளன.

இன்று முதல் தினசரி சிறப்பு ரயில்கள்: குன்னூா் முதல் உதகை வரை பயணம் செய்யும் குறுகிய தொலைவு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) முதல் அக்டோபா் 5-ஆம் தேதி வரை நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, குன்னூரில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06185) பிற்பகல் 2.50 மணிக்கு உதகையைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, உதகையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06186) மாலை 4.20 மணிக்கு குன்னூரை வந்தடையும்.

இந்த ரயிலில் முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments