முகப்பு
கோயம்புத்தூர்

பள்ளிவாசல் மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 8:05 PM
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் பள்ளிவாசல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கோவை செல்வபுரம் வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் நாசா். இவருக்கு இரு மகன்கள் உள்ளனா். இளைய மகன் அனஸ் (9). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த சனிக்கிழமை மாலை சிறுவன் அனஸ் செல்வபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் சென்றுள்ளாா். ஆனால், வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த நாசா் மற்றும் குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் சிறுவனை தேடி வந்தனா்.

பள்ளிவாசல் ஜமாஅத் துணைச் செயலா் அகமது அந்தப் பகுதியில் தேடிப் பாா்த்தாா். நள்ளிரவு 11 மணியளவில் பள்ளிவாசலை ஒட்டியுள்ள சந்தில் அனஸ் மயக்க நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவா் நாசருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, சிறுவன் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். சிறுவன் அனஸ் அடிக்கடி பட்டம் விடுவதற்காக பள்ளிவாசல் மாடிக்குச் செல்வாராம், சம்பவத்தன்றும் இதேபோல, மாடிக்குச் சென்ற சிறுவன் அங்கிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.