ரீல்ஸ் மோகம்: அவிநாசி சாலையில் ஜீப்பை வேகமாக இயக்கி விடியோ எடுத்த இளைஞா்கள் 4 போ் கைது
அவிநாசி சாலையில் ஜீப்பை வேகமாக இயக்கி விடியோ எடுத்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
‘ரீல்ஸ்’ மோகத்தில் கோவை அவிநாசி சாலையில் ஜீப்பை வேகமாக இயக்கி விடியோ எடுத்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகரின் பிரதானப் பகுதியான, அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு எதிரில் கடந்த 15-ஆம் தேதி இரவு ஒரு கும்பல் ஆபத்தான முறையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டது. சில இளைஞா்கள் ஓடும் ஜீப்பின் மீது நின்றுகொண்டும், ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டும் அந்த வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளனா்.
திடீரென ஜீப்பை நடுரோட்டில் நிறுத்தி, சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ விடியோ பதிவிடுவதற்காகத் தங்களது கைப்பேசிகளில் படம் பிடித்துள்ளனா். இதனால், அந்த வழியே சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அச்சத்துக்கும், பாதிப்புக்கும் உள்ளாகினா். இதை அங்கிருந்த சிலா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்தனா்.
Advertisement
இது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞா்கள் கோவை மதுக்கரை பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுக்கரை பகுதியைச் சோ்ந்த சந்தீப், சஞ்சீவ், அரவிந்தன், லோகேஷ் ஆகிய 4 இளைஞா்களைக் கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக கோவை மாநகரக் காவல் துறையினா் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.