தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், பொங்கலுக்கு செங்கரும்புகள் விலை உயரும் நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பல லட்சம் விவசாயிகளில் 90 சதவீதம் பேர் ஆலை கரும்புகளைத்தான் பயிரிட்டு வருகின்றனர். செங்கரும்பை பொருத்தவரை ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, கடலூர், தேனி உள்பட சில மாவட்டங்களில்தான் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
பொங்கல் நேரத்தில் மட்டும்தான் செங்கரும்பு விலைபோகும், பிற நேரங்களில் விலை வீழ்ச்சி அடைந்துவிடும் என்பதால் குறைவான ஏக்கரில்தான் இக்கரும்பை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சுமார் 2,000 ஏக்கருக்குள் மட்டும்தான் செங்கரும்பு பயிரிடப்படுவதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கரும்பு பயிரிட ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவாகிறது. சில விவசாயிகள் கரும்பை நேரடியாக விற்பனை செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்திலேயே ஏக்கர் கணக்கில் வியாபாரிகளிடம் விற்று விடுவார்கள். அவற்றை வியாபாரிகள் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.
தொழில் போட்டி ஏற்பட்டு வியாபாரிகள் விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஓர் இணை (ஜோடி) கரும்பு ரூ. 50-க்கு விலைபோனது. சிறிய, நடுத்தர கரும்பு இணைக்கு ரூ.20, ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி, விற்பனை செய்வதற்காக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான கரும்புகள் நன்றாக வளர்ந்து தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. சில இடங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள கரும்புகளில் உள்ள அடித்தோகைகள் அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாள்கள் கரும்பு அறுவடை செய்யும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, கரூர் சாலையில் உள்ள சொட்டையனூரைச் சேர்ந்த விவசாயி ராமசாமி கூறியதாவது:
ஒவ்வோர் ஆண்டும் தைப் பொங்கல் அறுவடைக்காக செங்கரும்பு சாகுபடி செய்வோம். கரும்பு முளைத்த ஒரு மாதத்தில் அடித்தோகையை அகற்றுவோம். அதன் பின்னர் அறுவடை செய்யும் வரை 3 முறை தோகைகளை அகற்றுவோம். தற்போது சில இடங்களில் கரும்புத் தோகைகளை அகற்றிவிட்டு அறுவடைக்குத் தயார் நிலையில் வைத்துள்ளார்கள். இன்னும் சில நாள்களில் கரும்பு அறுவடை தொடங்கும்.
கடந்த ஆண்டு 1,000 கரும்புகள் ரூ. 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படும். காரணம், கடும் வறட்சியால் கரும்பு சாகுபடி மிகவும் குறைந்துள்ளது என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி கூறியதாவது:
தமிழகத்தின் சராசரி மழை அளவு 920 மி.மீ. ஆனால், இந்த ஆண்டு பாதி அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. பெய்யக்கூடிய வடகிழக்குப் பருவமழையில் 65 சதவீதம் பொய்த்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் சரிந்துவிட்டது. இதனால், மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. கடந்த ஆண்டு, செங்கரும்பு ஏக்கருக்கு 60 டன் விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு வறட்சியால் அதிகபட்சம் 30 டன் மட்டுமே கிடைக்கும். எனவே, செங்கரும்பு விலை கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகரிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.