ஈரோடு

அரசியலில் இறங்கி குறுகிய வட்டத்தில் ரஜினி சிக்கிக் கொள்ளக் கூடாது: இளங்கோவன் வேண்டுகோள்

DIN

அரசியலில் இறங்கி குறுகிய வட்டத்தில் ரஜினி சிக்கிக் கொள்ளக் கூடாது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 ஈரோட்டில் தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
 புதுதில்லி சென்று வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் படத்தை திறக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அதற்குப் பிரதமரை அழைப்பதாகவும் தெரிவித்தார். சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை வைப்பது சட்டவிரோதமானது.
 பிரதமர் மோடியை சந்தித்தபோது தன்னுடன் தனது உறவினரையும் முதல்வர் அழைத்துச் சென்றது தவறான முன்னுதாரணம். பிரதமரை சந்திக்கும் முதல்வர், அரசு அதிகாரிகளை மட்டுமே உடன் வைத்திருக்க வேண்டும். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
 கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ. 3,500 ஆக தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்தக் கோரிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பாலில் ரசாயனம் கலந்துள்ளதாக அமைச்சரே தெரிவிக்கிறார். அறிக்கை விடுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பால் சுத்தமாக இருக்கிறது என்று உத்தரவாதம் வழங்க வேண்டும்.
 ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் பிரதமரை 10 நாள்களுக்கு ஒருமுறை சந்திக்கின்றனர். தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. குடிநீர்ப் பிரச்னை சரிசெய்யப்பட வில்லை.
 ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவானவர். அவர் கடைசி வரை தமிழக மக்கள் எல்லோருக்கும் பொதுவானவராகவே இருக்க வேண்டுமே தவிர, அவர் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி சிறிய வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார் என நினைக்கிறேன்.
 குடியரசுத் தலைவர் பதவிக்கு பொதுவான வேட்பாளரை காங்கிரஸ் முன்நிறுத்தும். அதனை பாஜக ஆதரித்தால் நாங்கள் வரவேற்போம். தமிழகத்தில் கல்விக் கொள்கை மாற்றம் செய்வதில் பல குழப்பங்கள் உள்ளன. தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
 தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும். அப்படி டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் காவல் நிலையங்களிலேயே டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்.
 தேர்தலின்போது மக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் போடப்படும் என மோடி தெரிவித்தார். இதுவரை ஒரு பைசா கூட போடவில்லை. மீனவர்கள் துயரம் துடைக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும், வேலைவாய்ப்பை பெருக்குவோம் எனக் கூறினார். ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்றார்.
 பேட்டியின்போது, மாநகர் மாவட்டத் தலைவர் ரவி, வடக்கு மாவட்டத் தலைவர் சரவணன், மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம், சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT