முகப்பு
ஈரோடு

கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோயில் திருவிழா: மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

பவானிசாகர், கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோயில் விழாவையொட்டி, காராட்சிக்கொரை சோதனைச் சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பவானிசாகர், கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் கோயில் விழாவையொட்டி, காராட்சிக்கொரை சோதனைச் சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
பவானிசாகர் வனக் கோட்டம், கெஜஹட்டி கணவாய் மலையில் ஆதி கருவண்ணராயர் பொம்மதேவர் வீரசுந்தரி  திருக்கோயில் உள்ளது. உப்பிலிய நாயக்கர் சமூகத்தினருக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமி நாளன்று பொங்கல் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. செவ்வாய்க்கிழமை மகா அலங்கார பூஜையும், மாயாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு அலங்காரம், மஹா தீபாரதனை புதன்கிழமை நடைபெற்றது. இதில், பெண்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.
மேலும், பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான கிடாக்களை பலியிட்டு காணிக்கை செலுத்தினர். கோயில் வளாகத்தில் சமைத்து உறவினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தனர். 
கோபி, அந்தியூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர்,சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனி லாரி, பேருந்து மூலமாக கோயிலுக்கு வந்தனர். கராட்சிக்கொரை வனச் சாவடியில் சோதனை செய்த பின்னரே வனத்துக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்த வாகனத் தணிக்கையில் வாகனத்தின் ஒலிபெருக்கி, அரிசிமூட்டை, வாழை இலை போன்றவற்றில் மறைத்து கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 அதேபோல, வன விலங்குகளைத் தொந்தரவு செய்யும் மத்தளம், தப்பாட்டம் போன்ற இசைக் கருவிகளை  எடுத்துச் செல்லவும் வனத் துறையினர் தடைவிதித்தனர்.  விழாவையொட்டி,  சத்தி டி.எஸ்.பி. பழனிசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →