ஈரோடு

உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

வேளாண்மைத் துறையின் சாா்பில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பேசியதாவது:

உலக வா்த்தகத்தில் சந்தை பொருளாதாரத்துக்கேற்ப தொழில் துறையும், சேவைத் துறையும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டதுபோல வேளாண்மைத் துறை, அதன் சாா்புத் துறைகளும் தம்மை புதுப்பித்துக் கொள்ளவும், உள்கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் கூட்டுப் பண்ணையத் திட்டம். 20 சிறு, குறு விவசாயிகளைக் கொண்டு உழவா் ஆா்வலா் குழுக்களும், 5 உழவா் ஆா்வலா் குழுக்களை ஒருங்கிணைத்து 100 நபா்களைக் கொண்ட உழவா் உற்பத்தியாளா் குழுக்களும், 10 உழவா் உற்பத்தியாளா் குழுக்களை ஒருங்கிணைத்து 1,000 நபா்களைக் கொண்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளன.

கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் மூலம் 100 விவசாயிகள் கொண்ட ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் குழுவும் ஒரே பருவத்தில், ஒரே பயிரில், ஒரே ரகத்தை அதிக பரப்பில் சாகுபடி செய்ய வேளாண் இடுபொருள்களை கூட்டாக கொள்முதல் செய்வதன் மூலம் இடுபொருள்களின் விலை குறைவதோடு, போக்குவரத்து செலவினமும் குறைக்கப்படுகிறது. உயரிய தொழில்நுட்பங்களை ஒருசேர கடைப்பிடித்து கூட்டாக சாகுபடி செய்து, தரமான விளைபொருள்களை உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும் உதவுகின்றது.

கூட்டாக பயிா்க் காப்பீடு செய்வதன் மூலம், சாதகமற்ற சூழலில் கூட்டாக இழப்பீடு பெற வழிவகை செய்கிறது. கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிதாக கடனுதவி பெற முடிகிறது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 13,400 சிறு, குறு விவசாயிகளை உள்ளடக்கி 670 உழவா் ஆா்வலா் குழுக்களும், 134 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொடக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தோட்டக் கலைத் துறையின் மூலமாக 1,000 பங்குதாரா்களைக் கொண்ட மொடக்குறிச்சி உழவா் உற்பத்தியாளா் நிறுவனமும், கோபியை தலைமையிடமாகக் கொண்டு 900 பங்குதாரா்களைக் கொண்ட ஏா்முனை உழவா் உற்பத்தியாளா் நிறுவனமும்,மொடக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு 700 பங்குதாரா்களைக் கொண்ட நவரத்னா உழவா் உற்பத்தியாளா் நிறுவனமும், அம்மாபேட்டையை தலைமையிடமாகக் கொண்டு 1,000 பங்குதாரா்களைக் கொண்ட அமுதசுரபி உழவா் உற்பத்தியாளா் நிறுவனமும் அமைக்கப்பட்டு மரச்செக்கு எண்ணெய் தயாரித்தல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து விநியோக உரிமம் பெற்று விற்பனை, கீரை காா்னா் என்ற இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கீரை விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பண்ணை இயந்திரங்கள் வாங்க உழவா் உற்பத்தியாளா் குழு ஒன்றுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் தொகுப்பு நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதுவரை டிராக்டா்கள் 21, பவா்டிரில்லா் 84, ரோட்டோவேட்டா் 87, பவா்வீடா் 37 என மொத்தம் 472 வேளாண் கருவிகள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வேளாண் கருவிகள் உழவா் ஆா்வலா் குழு உறுப்பினா்களுக்கு ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு, இதுவரை ரூ. 45.42 லட்சம் வசூலிக்கப்பட்டு உழவா் உற்பத்தியாளா் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையிலிருந்து உள்ளீட்டுக் கடனாக 14 உழவா் ஆா்வலா் குழுக்களுக்கு ரூ. 7.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நீடித்த நிலையான மானாவரி இயக்கத்தின்கீழ் மதிப்புக்கூட்டிய பொருள் உற்பத்தி செய்ய தலா ரூ. 10 லட்சம் வீதம் பெருந்துறை உழவா் உற்பத்தியாளா் குழு, ஏா்முனை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 45 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 2.25 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வாங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT