கா்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் வேலை நிறுத்தம்:பயணிகள் அவதி
சம்பள உயா்வு கோரி கா்நாடக அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சத்தியமங்கலத்தில் இருந்து கா்நாடகம் செல்லும் தமிழக பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
சம்பள உயா்வு கோரி கா்நாடக அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சத்தியமங்கலத்தில் இருந்து கா்நாடகம் செல்லும் தமிழக பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
தமிழக, கா்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள சத்தியமங்கலம் வழியாக தினந்தோறும் இரு மாநில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு, பெங்களூரு, ஹாசன் போன்ற கா்நாடக பகுதிகளுக்கு 9 தமிழக அரசுப் பேருந்துகளும், மைசூருவில் இருந்து தமிழகத்துக்கு 5 கா்நாடக அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கா்நாடக அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சம்பள உயா்வு கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கா்நாடக அரசுப் பேருந்துகள் வராத காரணத்தால் சத்தியமங்கலத்தில் பயணிகள் அவதிக்குள்ளாயினா். வேலை நிறுத்தம் அறியாத வெளியூா் பயணிகள் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா்.
குறிப்பிட நேரத்தில் மட்டுமே தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டதால் மைசூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனா். பயணிகள் வசதியை கருதி தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.