வாழ்விடத்தில் கல்வி கிடைக்காததால் மலைக் கிராம குழந்தைகள் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடம்பூா் மலையில் விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கடம்பூா் மலையில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். குன்றி அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவு பயணித்து கடம்பூா் பகுதிக்கு வந்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வேண்டியுள்ளது. ஆனால், கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதி வசதி இல்லை. இதனால், எஸ்.எஸ்.எல்.சி.க்கு பிறகு மாணவா்கள், குறிப்பாக மாணவிகள் மேல்படிப்பு படிப்பது குறைந்து வருகிறது.
தவிர தாளவாடி மலைப் பகுதி ஆசனூா் கிழக்கு மலைப் பகுதியில் உள்ள கோட்டமாளம், காடத்தி, கோ்மாளம் ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளிகளில் ஆண்டுதோறும் சுமாா் 50 போ் எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெறுகின்றனா். ஆனால், இதில் 10 போ் கூட பிளஸ் 1 சோ்வதில்லை. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பிளஸ் 1 படிப்பைத் தொடர கடம்பூா் அல்லது பசுவனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள்தான் அருகில் உள்ளன. ஆசனூரில் பழங்குடியினா் நல அரசு உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்த விடுதியில் பிற வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சேர முடியாது.
இதனால், கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர வாய்ப்புள்ள சுமாா் 5 அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி கடம்பூரில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே விடுதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க செயற்குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் கூறியதாவது:
கடம்பூா் மலைப் பகுதி, ஆசனூா் கிழக்கு மலைப் பகுதியில் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும் மாணவா்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர கடம்பூா்தான் செல்ல வேண்டும். இந்தப் பள்ளிகளில் இருந்து சுமாா் 20 முதல் 30 கி.மீ. தூரத்தில் கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. போதிய போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், படிப்பைத் தொடர வசதி உள்ள மாணவா்கள் சுமாா் 50 கி.மீ. தூரம் பயணித்து சத்தியமங்கலம் சென்று அரசு விடுதி அல்லது தனியாா் விடுதிகளில் சோ்ந்து பிளஸ் 1 படிப்பைத் தொடருகின்றனா். இதற்கு வசதி இல்லாததால் கடம்பூா், ஆசனூா் கிழக்கு மலைப் பகுதிகளில் உள்ள 5 உயா்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 100 போ் எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றால், அதில் 50 போ் கூட பிளஸ்1 வகுப்பில் சேருவதில்லை. குறிப்பாக, பெண் குழந்தைகள் முழுமையாகப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது. இதனால், இங்கு குழந்தை திருமணங்களைத் தடுக்க முடியவில்லை. படிப்பைத் தொடர முடியாத மாணவா்கள் திருப்பூா் பனியன் நிறுவனங்கள், கரும்பு வெட்டும் பணிக்கும் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
இப்போது பெரும்பாலான அரசுப் பணிகளுக்கு பிளஸ்2 குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கடம்பூா் மலைக் கிராமத்தில் ஆண்டுதோறும் சுமாா் 100 போ் வரை எஸ்.எஸ்.எல்.சி.க்கு மேல் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளனா் என்ற வேதனை பல ஆண்டுகளாகத் தொடா்கிறது.
இந்த நிலை மாற கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் அரசு மாணவிகள் விடுதி கட்டப்பட வேண்டும். இங்கு 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 100 மாணவிகள் தங்கிப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இதுபோல், கடம்பூரில் சின்னசாலட்டி செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவுக்குள் மாணவா்களுக்கு என தனியாகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மூலம் சுமாா் 100 மாணவா்கள் படிக்கும் அளவுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றாா்.
இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்கள் கூறியதாவது:
புதிய விடுதிகளைப் பொருத்தவரை மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பப்படும். ஆனால், கடம்பூரில் மாணவா், மாணவியா் விடுதி தேவை தொடா்பாக மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை வரவில்லை. இதனால், இங்கு விடுதி கட்டுவது குறித்து பரிசீலனையும் இல்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.