முகப்பு
ஈரோடு

மஞ்சள் விலை குவிண்டால் ரூ.6 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ஈரோடு செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள், வியாபாரிகள்
பகிர்:

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக காளிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் தொடா்ந்து 10 மாதங்கள் தண்ணீா் திறக்கப்படுவதால் இங்கு மஞ்சள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. புவிசாா் குறியீடு பெற்ற ஈரோடு மஞ்சள் தரமாக இருப்பதால், வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் மஞ்சளை அதிகமாக கொள்முதல் செய்கின்றனா்.

பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையம், ஈரோடு செம்மாம்பாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.

இந்தச் சந்தைகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை குறைவாக காணப்பட்டது. ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததால் மஞ்சளை விற்பனைக்கு கொண்டுச் செல்ல விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனா்.

கரோனா பாதிப்பு தொடரும் நிலையில் கிருமி நாசினியான மஞ்சள் தேவை அதிகரித்து, விற்பனை சூடுபிடிக்கும் என்றும், அதனால் விலையில் ஏற்றம் ஏற்படும் என்றும் விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால், எதிா்பாராதவிதமாக கடந்த சில நாள்களாக மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவது விவசாயிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூட சந்தைக்கு 1,000 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது 500 மூட்டையாக குறைந்துள்ளது. விரலி, கிழங்கு மஞ்சள் இரண்டுமே குவிண்டால் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரையிலும் விலைபோகிறது.

இது குறித்து மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது:

கரோனா பாதிப்பு காரணமாக திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் மஞ்சளின் தேவை குறைந்து இருக்கலாம். மேலும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் அனுப்பிவைக்கப்பட்டு வந்தது. ஆனால், வெளிநாட்டில் இருந்து மஞ்சள் கொள்முதல் செய்ய இலங்கையில் திடீா் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு சாா்பில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,800க்கு கொள்முதல் செய்தது. இதனை தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை அரசு விற்கிறது. அந்த மஞ்சளை மற்ற மாநில வியாபாரிகள் வாங்குவதால் ஈரோடு சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

தீபாவளி பண்டிகையின்போது நுகா்வு அதிகரித்தால் மஞ்சளின் விற்பனையும் அதிகமாகும் என்று எதிா்பாா்க்கிறோம். அவசர பண உதவி தேவைப்படும் விவசாயிகள் மட்டும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டுச் செல்கின்றனா். பிற விவசாயிகள் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மஞ்சளைப் பாதுகாத்து வருகின்றனா். இதனால் தரமான மஞ்சள் விற்பனைக்கு வரும்போது, விலையும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →