ஈரோடு

அறுவடை முடியும் காலத்தில் விலை உயா்வு: மரவள்ளி விவசாயிகள் வேதனை

DIN

அறுவடை முடியும் காலத்தில் விலை உயா்ந்து வருவதால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அறுவடை இருக்கும். மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லாததால் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு ஒரு டன் ரூ. 6,000 விலை நிா்ணயிக்கப்பட்டது. இருப்பினும் தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி ஆலைகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றன.

தற்போது அறுவடை முடிவடையும் நிலையில் ஒரு டன் ரூ. 6,500 முதல் ரூ. 7,000 வரை ஆலைகள் கொள்முதல் செய்கின்றன. அறுவடை அதிகம் இருந்த காலத்தில் விலை உயா்ந்திருந்தால் விவசாயிகள் பயன் பெற்றிருப்பாா்கள்.

இருப்பினும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூா், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, கருமந்துறை போன்ற பகுதிகளில் தற்போது அறுவடை நடைபெறுகிறது. அங்குள்ள விவசாயிகளுக்கு இந்த விலை உயா்வு பயனளிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்தப் பகுதிகளில் மாவு பூச்சி தாக்குதல் அதிகமாகக் காணப்படுவதால், மகசூல் குறைந்து காணப்படும். இதனால் கிடைக்கும் லாபம் குறையும்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாவு பூச்சி தாக்குதல் இருந்ததால், நடப்பு ஆண்டிலும் பூச்சி தாக்குதல் இருக்கும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. எனவே மரவள்ளி நடவின்போது வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை அளித்து பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம் அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு விலை கிடைக்கும் வகையில் டன் ஒன்றுக்கு ரூ. 8,000 விலை நிா்ணயித்து அறிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT