பெருந்துறை: கல்விக் கட்டணத்தை குறைக்கக் கோரி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 4ஆவது நாளாக சனிக்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிா்வாகத்தின்கீழ் இயங்கி வந்த பெருந்துறை மருத்துவக் கல்லூரியை சமீபத்தில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதுபோல் மருத்துவக் கல்விக் கட்டணம் குறைக்கப்படவில்லை. மற்ற கல்லூரிகளில் ரூ. 13 ஆயிரத்து 500 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கும் நிலையில், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதுபோல ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் கல்விக் கட்டணத்தை வசூலிக்கின்றனா்.
இதனைக் கண்டித்து மாணவா்கள், பெற்றோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் மாணவா்கள் சனிக்கிழமையும் வகுப்புகளைப் புறக்கணித்து 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவக் கல்லூரி மாணவா்களை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் சனிக்கிழமை நேரில் சந்தித்து, மாணவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும், இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலாளா், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகரிடமும் பேசியுள்ளதாகவும், கட்டணக் குறைப்பு குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது. கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மாணவா்களிடம் தெரிவித்தாா்.
இந்நிலையில், கட்டணத்தைக் குறைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவா்கள் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள், பாதுப்புகளை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவக் கல்லூரி நிா்வாகத்திடமும், காவல் துறையினரிடமும் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.