மஞ்சள் விலை தொடர்ந்து உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வால் தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது: ஈரோடு மஞ்சள் வளாகத்தில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடந்த ஏலத்திற்கு கர்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து புது மஞ்சள் 500 மூட்டைகளும் மற்றும் பழைய மஞ்சள் 1,500 மூட்டைகளும் விற்பனைக்கு வந்தது. பழைய மஞ்சள் விரளி ரூ.8,414 வரையும்,கிழங்கு ரூ.7,569 வரையும், புதிய மஞ்சள் விரளி ரூ.8,209 வரையும் கிழங்கு ரூ.7,699 வரையும் விற்பனை ஆனது. இந்தாண்டு புதிய மஞ்சள் வரத்து குறைவாக இருப்பதாலும், ஏற்றுமதி அதிகமாக இருப்பதாலும் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஈரோடு மஞ்சள் சந்தைகளில் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு மஞ்சள் வளாக ஏல நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் உடனடியாக பணம் பட்டுவாட செய்வது போன்ற வியாபார நடைமுறைகளால் ஈர்க்கப்பட்ட தெலங்கானா மாநில விவசாயிகள் சில நாள்களாக நேரடியாக மஞ்சளை அனுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் மூலமாகவே மஞ்சள் வந்தது. கர்நாடக மாநிலத்தில் இப்போது அறுவடை தொடங்கியுள்ளதால் ஈரோடு சந்தைக்கு தினமும் ஒரு லோடு(சுமார் 200 மூட்டை) மஞ்சள் வருகிறது. அறுவடை இந்த மாத இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளது. இதனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் 15 முதல் 20 லோடு வரை மஞ்சள் வர வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, பஸ்மத், மரத்வாடா பகுதிகளில் புது மஞ்சள் வரத்து இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த மஞ்சள் ஈரோடு சந்தைக்கு வர வாய்ப்பில்லை. இருப்பினும் அங்குள்ள சந்தைகளுக்கு மஞ்சள் வரத்து அதிகரித்தால் ஈரோடு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த சந்தைகளுக்கு மார்ச் மாத இறுதியில் தான் முழுவீச்சில் மஞ்சள் வரத்து இருக்கும். இதனால் ஈரோடு சந்தையில் உடனடியாக மஞ்சள் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைந்துள்ளது. தவிர மத்திய நறுமணப் பொருள்கள் வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் அளவு மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து நேரடியாக வங்கதேசத்துக்கு கிஷான் ரயில் இயக்கப்படுவதால், குறைந்த கட்டணத்தில் மஞ்சள் அந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. எளிதான ஏற்றுமதி வாய்ப்பு மூலம் மஞ்சள் தேவை அதிகரித்து விலை அதிகரித்துள்ளது. அறுவடை, வரத்து, சந்தை சூழல் போன்ற சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் அம்சங்கள் சாதகமாக உள்ளதால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.