கொமதேக 50 தொகுதிகளில் வலிமையாக உள்ளது: ஈ.ஆர்.ஈஸ்வரன்
கொமதேக 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை பெற்றிருக்கிறது என அதன் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஈரோடுகொமதேக 50 தொகுதிகளில் வலிமையாக உள்ளது: ஈ.ஆர்.ஈஸ்வரன்
கொமதேக 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை பெற்றிருக்கிறது என அதன் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஈரோடு: கொமதேக 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை பெற்றிருக்கிறது எனவும், எங்கள் கட்சியின் வலிமைக்கு ஏற்ப திமுக கூட்டணியில் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் எனவும் அதன் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொமதேக ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.மலைச்சாமி தலைமையில் ஈரோடு அருகே மேட்டுக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞரணி செயலாளர் எஸ்.சூர்யமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பேசினர். கூட்டத்திற்கு பிறகு ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கொங்கு மண்டலத்தில் சாயக்கழிவு பிரச்னை, ஐடிபில் திட்ட பிரச்னை, உயர் மின்கோபுரம் பிரச்னை, நூல் விலையேற்றத்தால் ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கட்டுமான பொருள்கள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி எனப் பல பிரச்னைகள் இருக்கும்போது, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த அறிவிப்பையும் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
சட்டப்பேரவை தேர்தலில் கொமதேக தனியாக, தனிச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என முதல்வர் பேசி இருக்கிறார். ஆனால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் இருக்குமா? இருக்காதா? என்பது விரைவில் தெரியவரும். பாஜகவுடன் கூட்டணி என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர். ஆனால் பாஜக எடப்பாடி பழனிசாமியை இதுவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜக ரஜினிகாந்தை வைத்துக்கொண்டு ஏற்படுத்திய சலசலப்புகள் கொஞ்சம் குறைந்துள்ளது. பாஜக நிர்வாகிகள் கடந்த ஒரு வார காலமாக அமைதியாக இருக்கின்றனர். சசிகலா விடுதலை ஆன பிறகு அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்படும். கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. கடந்த காலங்களில் 72 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டுள்ளோம்.
50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை கொண்டிருக்கிறோம். கொமதேகவின் வலிமையை கூட்டணி தலைமை புரிந்துகொண்டிருக்கிறது. எங்களுடைய வலிமைக்கு தகுந்தவாறு தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பேசுவதன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து பேச இன்னும் காலம் இருக்கிறது. பாஜக அழுத்தம் காரணமாக வேளாளர் என்ற பெயரை சில சாதிகளுக்கு கொடுப்பதற்கு முதல்வர் பரிந்துரை செய்திருக்கிறார். இதனால் காலம் காலமாக வேளாளர் என்று அழைக்கப்பட்ட சாதியினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்ற பேரத்திற்காக வன்னியர்களுக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் ராமதாஸ் என பேசிவந்தார்.
பிற்பட்ட சமுதாயத்தினர் இடையே இவருக்கு எதிர்ப்பு உருவானதால், இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளித்தால் போதும் என ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது ரசிகர்களே முடிவு செய்துவிட்டனர். அவர் படப்பிடிப்புக்கு கூட செல்லவில்லை. அவர் குறித்து பேச ஒன்றும் இல்லை என்றார்.