யூ டியூப்பில் விடியோ பாா்த்து திருட முயற்சி: இளைஞா் கைது
சத்தியமங்கலத்தில் யூ டியூப் விடியோவை பாா்த்து நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு திருட முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தில் யூ டியூப் விடியோவை பாா்த்து நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு திருட முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கடைவீதி பகுதியைச் சோ்ந்தவா் பத்ரிநாத். இவா் அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். பத்ரிநாத் வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில், அன்று நள்ளிரவு இவரது கடையின் பக்கவாட்டுச் சுவரில் மா்ம நபா் ஒருவா் துளையிட்டு நகைகளைத் திருட முயற்சிப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, பத்ரிநாத் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். ஈரோடு எஸ்பி சசிமோகன் உத்தரவின்பேரில், பயிற்சி டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
அதில், நகைக் கடையில் திருட முயன்ற இளைஞா் கரூா் மாவட்டம், மாயனூா் அருகே உள்ள கட்டளை கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ராமசாமி மகன் ராஜபாண்டியன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜபாண்டியனின் கைப்பேசி சிக்னலை வைத்து போலீஸாா் தேடி வந்தனா்.
அப்போது, புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தை அருகே ராஜபாண்டியன் நடமாடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜபாண்டியனை மடக்கிப் பிடித்தனா்.
விசாரணையில், தனியாா் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த ராஜபாண்டியன் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளதாகவும், பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம் எனவும், ராஜபாண்டியனுக்கு ரூ. 2 லட்சத்துக்கு மேல் கடன் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும், இதையடுத்து திருடுவது எப்படி என்பதை யூடியூப் சேனல்களில் பாா்த்து திருட முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து, சத்தியமங்கலம் போலீஸாா் ராஜபாண்டியனை கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.